பக்கம் எண் :

94

139. தாமகத்தால் நட்டுத் தமரென் றொழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகா ராயினென்?
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரால்
கானகத் துக்க நிலா.

(சொ-ள்.) மான் மானும் கண்ணாய் - மான்போன்ற (மருண்ட) நோக்கினை உடையாய், தாம் அகத்தால் நட்டு தமர் என்று ஒழுகியக்கால் - தாம் மனத்தால் நட்புப்பூண்டு சுற்றத்தார் என்னும்படி ஒழுகியவிடத்தும், நாணகத்து தாம் இன்றி நன்று ஒழுகாராயின் - தம்மால் நட்பாகக் கொள்ளப்பட்டார் மனதின் கண் நாணம் இல்லாது, (நட்பிற்குத்தக்க நல்ல செயல்களைச் செய்து ஒழுகாவிடில்) என் - அந்நட்பால் என்ன பயனுண்டாம்? மறந்தும், பரியலர் - மனத்தால் நட்புச்செய்த அவர்கள் மறந்தும் இரங்குதல் இலர், கானகத்து உக்க நிலா - அந்நட்பு, (அனுபவித்தற்குரிய மக்களில்லாத) காட்டில்எறித்த நிலவினை ஒக்கும்.

(க-து.) கீழ்மக்களோடு கொண்ட நட்புப்பயனற்று ஒழியும்.

(வி-ம்.) 'குணனும் குடிமையும் குற்றமும் குன்றா, இனனும் அறிந்தியாக்க நட்பு' என்பராகலின், அங்ஙனம் ஆராயாது கொண்ட நட்புப் பயனற்று ஒழிதலைப்பற்றி வருந்தார் என்பது, மனத்தால் நட்புச் செய்திருப்பினும் ஆராய்ந்து கொள்ளாமையின் அதற்காக வருந்துவதிலர் என்பார் 'மறந்தும் பரியலர்' என்றார். காட்டின்கண் எறித்த நிலா பயனற்றொழிதல் போல, அறிவிலாரோடு கொண்டநட்பும் பயனற்று ஒழியுமென்பதாம்.

'கானகத் துக்க நிலா' என்பது பழமொழி.

(5)

140. கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ
விண்டற்கு விண்டல் மருந்து.

(சொ-ள்.) கண்டு அறிவார் போலார் - (முன்னரே அறிந்து வைத்தும்) கண்டு அறிவார் போலாராகி, கெழீஇ இன்மை செய்வாரை - நட்பு இன்மையை உண்டாக்குவாரை, தாமும் பண்டு அறிவார் போலாது - தாமும் முன்னரே அறிவார்போன்று இல்லாது, அவரேபோல் - அவர் நட்பின்மையை உண்டாக்கியது போல, விண்டு ஒரீஇ மாற்றி விடுதல் - அவரின் பிரிந்து நீங்கி