பக்கம் எண் :

95

நட்பினை மாற்றிவிடுக, அது - அச்செய்கை, விண்டற்கு விண்டல் மருந்து அன்றோ - தன்னிடத்துப் பூண்ட அன்பினை நீக்கியதனுக்குத் தானும் அதுநீக்குதல் மருந்தாமாறு போலாகுமல்லவா!

(க-து.) தம்மை நன்றாக அறிந்திருந்தும்அறியாதார் போன்று நடிப்பார் நட்பு விடுதற்குரியதாகும்.

(வி-ம்.) முன்னரே அறிந்திருந்தும் அறியார்போலக் கூறின், அவர்களுற்ற இன்னலை நீக்கவேண்டிய நிலைமை ஏற்படுமாதலால், அறியார்போலக் காட்டுவர். இத்தகையோரிடத்தில் நாம் முன்னரே நன்றாக அறிந்ததாகக் கூறினும் அவராற் பயன் பெறுதல் இல்லை. ஆதலால், அவரைப்போல நாமும்நட்பினை விடுதலே நன்றென்பதாம்.

கெழீஇ இன்மை - பொருந்துதல் இன்மை (அஃதாவது) நட்பின்மை. ஒருவி - ஒரீஇ எனவந்தது விகாரம்.

'விண்டற்கு விண்டல் மருந்து' என்பது பழமொழி.

(6)

141. பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
இருதலைக் கொள்ளியென் பார்.

(சொ-ள்.) பெரிய நட்டார்க்கும் - தம்மிடத்தில் மிகுதியாக நட்புப் பூண்டவர்க்கும், பகைவர்க்கும் - அவரது பகைவர்க்கும், சென்று திரிவு இன்றி தீர்ந்தார்போல் சொல்லி - அவரிடத்திற் சென்று மனவேறுபாடு இன்றி மிகவும் நட்டார்போன்று நின்று அவர்களது பகைமையை வளர்க்கும் சொற்களைச் சொல்லி, அவருள் ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதார் - அவர்களுள் ஒருவரோடு மனம் பொருந்த இருந்து உறுதியாயின செய்ய மனமியையாதார், இருதலைக்கொள்ளி என்பார் - இருகடையாலும் சுடுகின்றகட்டை என்று சொல்லப்படுவார்.

(க-து.) ஏற்பன கூறி இருவரது பகைமையைவளர்த்தல் அறிவிலாரது இயல்பு.

(வி-ம்.) இரண்டு கடையாலும் சுடுகின்ற கொள்ளியை ஒப்ப, இருதிறத்தார்கண்ணும் பகைமையைக் கொள்ளுத்துவரேயன்றி, ஒருதிறத்தார் மாட்டாவதுநின்று நன்மை செய்யார் அறிவிலார்.

'இருதலைக் கொள்ளி' என்பது பழமொழி.

(7)