16. பிறரியல்பைக்குறிப்பாலறிதல் 142. பேருலையுள் பெய்த அரிசியைவெந்தமை ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு - யார்கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும் கண்டது காரணமாம் ஆறு. (சொ-ள்.) யார் கண்ணும் கண்டது காரணம் ஆமாறு - யாவரிடத்தும் அறியப்பட்ட குணமே அறியப்படாத பிறவற்றையும் அறிதற்குரிய வழியாம் (ஆதலால்), பேர் உலையுள் பெய்த அரிசியை - கொதிக்கின்ற பெரிய உலையுள் இட்ட அரிசியை, வெந்தமை - வெந்த விதத்தை, ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு - ஓர் அகப்பைச் சோற்றாலே அறிந்ததைப்போல, யார் கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டும் - யாரிடத்தும் அறியப்பட்ட செயல் ஒன்றுகொண்டே குணம்,ஒழுக்கம் முதலியவற்றை அறிதல் வேண்டும். (க-து.) ஒருவருடைய செயல் கொண்டே அவரது குணம்,ஒழுக்கம் முதலியவற்றை அறியவேண்டும். (வி-ம்.) உலையிலுள்ள சோறு ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தல் வேண்டாததுபோல, குணம், ஒழுக்கம், செயல் முதலிய ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்தல் வேண்டுவதில்லையாம். அது முடியாத காரியம் ஆதலால், ஓர் அகப்பைச் சோற்றால் பானையிலுள்ள சோறு ஒவ்வொன்றின் பதமும் அறியப்படுதல்போல, செயல் ஒன்றானே அவரைப்பற்றிய ஒழுக்கங்கள்,குணங்கள் முதலியன தனித்தனியே அறியப்படு மென்பதாம். 'கண்டது காரணம் ஆம்' என்பது பழமொழி. (1) 143. யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித் தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் - ஆம்பல் மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப! கணையிலும் கூரியவாம் கண். (சொ-ள்.) ஆம்பல் மணஇல் கமழும் மலிதிரை சேர்ப்ப - ஆம்பல்பூக்கள் மணமனையைப்போல் நறுநாற்றம் கமழுகின்ற மிக்க அலைகளை உடைய கடல்நாடனே!, யாம் செய்த தீய - நாம் செய்த தீயசெயல்களை, மலை மறைத்தது என்று எண்ணி - மலையானது வெளிக்காட்டாது மறைத்தது என்று நினைத்து,தீயார்தாம் தம்தீமை தேற்றார் - தீயசெயல்களையுடைய அவர்கள் தாம் செய்யும் தம் தீய செயல்களினின்றும் தெளிதல் இலர், கண் கணையினும் கூரிய - மனத்து நிகழ்ச்சியை முகத்தின் வாயிலாக மிகவும் கூர்மையாகக் கண்கள் அறிந்துகொள்ளலின் அவை அம்பினும் கூர்மையுடையனவாம்.
|