(க-து.) பிறரது உள்ள நிகழ்ச்சியை அறிவதற்குக் கண்களே சிறந்த கருவிகளாம். (வி-ம்.) தீயார் தாம் செய்த தீமை மறைக்கப்பட்டன என்று கருதினும், அவர் செய்த தீமையை அவர் முகமே கண்டு விளக்கிக் காட்டலின், அஃது எல்லோராலும் அறியப்படும் என்பதாம். கண்கள் முகத்தைக்கொண்டு அகத்தை மிகக் கூர்மையாக அறிதலின். 'கணையிலும் கூரிய கண்'என்றார். 'கணையிலும் கூரியவாம் கண்' என்பது பழமொழி. (2) 144. வெள்ளம் வருங்காலை ஈரம்பட் டஃதேபோல் கள்ள முடையாரைக் கண்டே அறியலாம் ஒள்ளமர் கண்ணாய்! ஒளிப்பினும் உள்ளம் படர்ந்ததே கூறும் முகம். (சொ-ள்.) ஒள் அமர் கண்ணாய் - ஒளிபொருந்திய கண்ணை உடையாய்!, வெள்ளம் வரும் காலை ஈரம்பட்ட அஃதேபோல் - வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப்போல, கள்ளம் உடையாரை - வஞ்சனையான எண்ணம் உடையாரை, கண்டே அறியலாம் - மனத்தை முகங் காட்டுதலின் அதனைக்கொண்டே அறிந்துகொள்ளலாம், ஒளிப்பினும் - தங்கருத்தை வெளித்தோன்றாமல் ஒருவர் மறைப்பினும், முகம் உள்ளம் படர்ந்ததே கூறும் -முகமானது அவர் மனத்தில் உள்ளதையே வெளிப்படுக்குமாகலான். (க-து.) மறைப்பினும் உள்ளத்தில் உள்ளவாறேமுகம்காட்டு மென்பதாம். (வி-ம்.) ஆற்றில் முன்னே உண்டாகின்ற ஈரத்தினால் பின்னே வெள்ளம் வருமென்று அறியப்படுதல்போல, முகத்தின் குறிப்பால் அகத்தின்கண் உள்ள எண்ணம் அறியப்படும் என்பதாம். 'படர்ந்ததே கூறும்'என்றதனால் அவர் மறைத்தமையையுங்கூட வெளிப்படுத்தும்என்பதாம். 'உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்' என்பது பழமொழி. (3)
|