பக்கம் எண் :

98

145. நோக்கி அறிகல்லாத் தம்உறுப்புக் கண்ணாடி
நோக்கி அறிப அதுவேபோல் - நோக்கி
முகனறிவார் முன்னம் அறிப அதுவே
மகனறிவு தந்தை யறிவு.

(சொ-ள்.) நோக்கி அறிகல்லா தம் உறுப்பு - தம் கண்ணால் நோக்கி அறியமுடியாத தமது உறுப்பாகிய முகத்தை, கண்ணாடி நோக்கி அறிப - கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்வர், அதுவேபோல் - அதேபோல், நோக்கி முகன் அறிவார் - நோக்கி ஒருவன் முகத்தை அறிகின்றவர்கள், முன்னம் அறிப - காணமுடியாத அவனது உட்கருத்தை அறிவார்கள், அது - உள்ளத்தின் கருத்தை அவர் முகம் நோக்கி அறிதல், தந்தை யறிவு மகன் அறிவு - தந்தையினது அறிவை அவன் மகனது அறிவு நோக்கி அறிதல் போலும்.

(க-து.) முகத்தால் உள்ளக் கருத்துஅறியப்படும்.

(வி-ம்.) மகனது அறிவு தந்தையினது அறிவை ஒத்திருத்தல்போல, அகத்தினது கருத்தேமுகத்தினும் அறியப்படும்.

'மகனறிவு தந்தை யறிவு' என்பது பழமொழி.

(4)

146. ஒரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறமரிதால் தேமொழி! - யாரும்
குலக்குல வண்ணத்த ராகுப; ஆங்கே
புலப்புல வண்ணத்த புள்.

(சொ-ள்.) தேமொழி - தேன் போன்ற சொற்களை உடையாய்!, ஒருவர் தம் உள்ளத்தை ஒரும் ஒருவர் - ஒருவரது உள்ளத்தின் தன்மை ஆராய விரும்பும் ஒருவரால், தேரும் திறம் அரிது - ஆராயும் திறம் இல்லை, புலப்புல வண்ணத்த புள் - நிலந்தோறும் தாம் வாழும் நிலத்திற்குத் தக்க தன்மையாயிருக்கும் புட்கள், ஆங்கே - அதுபோல, குலக்குல வண்ணத்தராகுப -மக்கள் குலங்கள்தோறும் அவ்வக் குலத்திற்குரியதன்மையை உடையவராயிருப்பார்கள்.

(க-து.) ஒருவரது குலத்தால் அவரது குணம்அறியப்படும்.

(வி-ம்.) ஒருவருடைய குணங்களை ஆராய்ந்து கண்டறிய முடியாது. அவரது குலங்கொண்டே குணம் அறியப்படும்.