பக்கம் எண் :

1

ஓம்

சிறுபஞ்சமூலம்

மூலமும் விளக்கவுரையும்

கடவுள் வாழ்த்து

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி யாற்றப் பணிந்து - முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா
வெண்பா வுரைப்பன் சில.

(பதவுரை) முழுது உணர்ந்து - எல்லாவற்றையும் அறிந்து, மூன்று ஒழித்து-காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் நீக்கி, மூவாதான் - மூப்பில்லாதவனாகிய கடவுளின், பாதம் - திருவடிகளை, பழுது இன்றி - குற்றம் இல்லாமல், ஆற்ற - மிகுதியாக, பணிந்து - வணங்கி, முழுது ஏத்தி - (அவனுடைய மங்கள குணங்கள்) முழுவதும் போற்றி, மண் - மண்ணானது, பாய - பரவியிருக்கின்ற, ஞாலத்து - இப்பூமியிலுள்ள, மாந்தர்க்கு - மக்கட்கு, உறுதியா - நன்மை யுண்டாகுமாறு, சில வெண்பா - சில வெண்பாச் செய்யுட்களால் ஆகிய சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை, உரைப்பன் - யான் சொல்வேன்; (என்றவாறு.)

(பழைய பொழிப்புரை) காமாதி மூன்றையு மொழித்து முற்றுமுணர்ந்து, முப்பில்லாதான் பாத மனக்குற்ற நீக்கி மிகவும் வணங்கிப் பல குணங்களைப் புகழ்ந்து மண்பரந்த வுலகில் மக்கட் கெல்லாம் உறுதியாகிய பொருள்மேற் றொடுத்து வெண்பாவாகிய சில செய்யுட்களை யுரைப்பேன்.