பக்கம் எண் :

10

(க-ரை) சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்.

கரி, பரி, தேர், காலாள் என்ற நால்வகைச் சேனையில் கரிப்படை சிறந்ததாதலின், படைதனக்கு யானை வனப்பாகும் என்றார். சேவகர்க்கு எதிரிகளால் உடற்கு ஊறு வந்த காலத்தும் குறையாத வீரத்தன்மையே அழகாதலின், சேவகர்க்கு வாடாத வன்கண் வனப்பு என்றார். படைதனக்கு, இடைதனக்கு முதலியவற்றிலுள்ள தனக்கு என்பதில் தன், அ - சாரியைகள். நுண்மை - பண்புப்பெயர். ஆகும் - இசையெச்சம். கோல் - செங்கோல்; உவமையாகு பெயராய்க் கண்ணோடாது குடிகள் யாவரிடத்தும் முறை செயதலை யுணர்த்தியது. வன்கண்மை என்பது வன்கண் என மையீறு கெட்டு நின்றது.

(7)

பற்றினான் பற்றற்றா னூறவசி யெப்பொருளு
முற்றினா னாகு முதல்வனூற்-பற்றினாற்
பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான் காணான் பிணி.

(ப.ரை.) பற்று அற்றான் - எல்லாப் பொருள்களிலுங் கலந்து நின்றே அவற்றிற் சார்பில்லாதவனாகிய கடவுளாற் செய்யப்பட்ட, நூல் - முதனூலை, பற்றினான் - கடைபிடித்து ஒழுகுகின்றவன், தவசி - வீடு பேற்றை விரும்பி நோற்பவனாவான், எப்பொருளும் - எல்லாப் பொருளையும், முற்றினான் - முற்றவுணர்ந்தவன், முதல்வன் ஆகும் - எல்லார்க்குந் தலைவனாவான், நூல் பற்றினால் - நூல்களிற் கூறப்பட்ட அறங்களைக் கைக்கொள்வதனால், பாத்து உண்பான் - தன் மனைக்கு வரும் விருந்தினர் முதலியவர்களை யுண்பித்துத் தானும் உண்கின்றவன், பார்ப்பான் - அந்தணனாவான், பழி உணர்வான் - பழிக்கு எதுவான செயல்களை அறிந்து விலக்குவோன், சான்றவன் - அறிவா னிறைந்த பெரியோனாவான், காத்து - உடற்கு பொருந்தாத உணவுகளை மறுத்து,