உண்பான் - உண்பவன், பிணிகாணான் - நோய் கொள்ளான்; (எ.று) (ப-பொ-ரை) பற்றற்றானாற் சொல்லப்பட்ட நூலைப் பற்றினான் தவசியாவான், எப்பொருளையுமுற்ற வறிந்தான் முதல்வனாவான், நூலின்கட் சொன்னபடியே பகுத்துண்பான் பார்ப்பானாவான், பழியை யுணர்வான் சான்றானாவான், தனக்கு நுகர்கலாகாதென்று சொல்லியவற்றை நுகராதே காத்து நுகர்வான் பிணிகாணான். (க-ரை) கடவுள் நூலுணர்ந்தொழுகுபவன் தவமுடையன், எல்லா முணர்ந்தவன் தலைவன், பிறர்க்குப் பகுத்துக்கொடுத்துண்பவன் அந்தணன், பழியை விலக்கி யொழுகுபவன் பெரியோன், நல்லன தெரிந்துண்பவன் நோயறியான். பற்றற்றான் - தொடர்பற்றவனாகிய முழுமுதற் கடவுள் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை,‘ என்றார் திருவள்ளுவர். பற்றற்றான் நூல் என்பது இறைவன் ஓதிய வீட்டு நூல். எப்பொருளையும் உணர்ந்தவன் பலரையும் நல்லாற்றுப்படுத்துந் திறனுடையனாகவே அவனை யாவருந் தலைமகனாகக் கொண்டு போற்றுவார் என்பார், ‘எப்பொருளும் முற்றினானாகு முதல்வன்’, என்றார். பழியை யறிந்து நீக்குவோன் எல்லாராலும் பாராட்டப்படுஞ் சிறப்புடையவனாதலிற் சான்றோன் எனப்பட்டான். ‘’அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து,’’ ‘’மாறுபாடில்லாத வுண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை யுயிர்க்கு,’’ என்னுங் குறட்பொருளுணர்ந்து, கொள்ளத் தகாத வுணவை நீக்கிக் கொள்ளத் தக்க வுணவைக் கொள்வோன் நோயற்று வாழ்வான் என்பார், ‘காத்துண்பான் காணான் பிணி’, என்றார். பாத்து-பகுத்து என்பதன் மரூஉ. காத்தல் - தடுத்தல், மறுத்தல். (8) கண்வனப்புக் கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை எண்வனப் பித்துணையா மென்றுரைத்தல்-பண்வனப்புக்
|