கட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் றன்னாடு வாட்டானன் றென்றல் வனப்பு. (ப.ரை.) கண் வனப்பு - கண்ணுக்கு அழகாவது, கண்ணோட்டம் - பிறர்மேற் கண்ணோடுதலாம், கால் வனப்பு - கால்களுக்கு அழகாவது, செல்லாமை - பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம், எண் வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகாவது, இ துணை ஆம் என்று உரைத்தல் - பொருளை அறுதியிட்டு முடிவு செய்தலாம், பண் வனப்பு - இசைக்கு அழகாவது, கேட்டார் - அதனைக் கேட்டவர்கள், நன்று என்றல் - இது நல்லது என்று புகழ்ந்துரைத்தலாம், கிளர் - புகழினால் விளங்குகின்ற, வேந்தன் வனப்பு - அரசனுக்கு அழகாவது, தன் நாடு - தனது நாட்டிலுள்ள குடிகளை, வாட்டான் - (இவன்) வருத்தான், நன்று (இவனுடைய ஆட்சி) நல்லது, என்றல் - என்று (உலகத்தவர் அவனைப் புகழ்ந்து) கூறுதலாம்; (எ-று.) (ப-பொ-ரை) கண்ணிற்கு வனப்பாவது பிறர்மேற் கண்ணோடுதல், காலிற்கு வனப்பாவது பிறர் மாட்டிரந்து செல்லாமை, ஆராய்ந்து சூழுஞ் சூழ்ச்சிக்கு வனப்பாவது இவ்வளவு இன்னதென்று துணிந் துரைத்தல், பாடும் பண்ணிற்கு வனப்பாவது கேட்டார் நன்றென்றல், படை கிளர்ந்தெழும் வேந்தற்கு வனப்பாவது தானாளும் நாட்டினை வருத்தான் மிகவும் நன்றென்றல். (க-ரை) கண்ணுக் கழகு கண்ணோட்டம், காலுக்கழகு இரந்து செல்லாமை, ஆராய்ச்சிக் கழகு பொருளைத் துணிந்து சொல்லுதல், இசைக் கழகு கேட்பவர் அவனைப் புகழ்தல், அரசனுக்கழகு குடிகற் அவனை நல்லவ னென்றல். கண்ணோட்டம் - கண் பிறர்மேற் செல்லுதல். அதாவது அன்புடன் பார்த்தல்; அருட்பார்வையற்ற கண் கொடுங்கண், வன்கண் எனப்படும். செல்லாமை - நடவாமை. கண் வனப்பு கால் வனப்பு முதலிய நான்கும் நான்காம் வேற்றுமைத் தொகை
|