(க-ரை) கற்புடைப் பெண், கற்றடங்கினான், நாடு வேந்து, சேவகன் இவர்கள் முறையே கணவன் முதலியவர்களுக்கு அமிர்தம் போல் நின்று உதவுவார்கள். கற்பு - கணவன் முதலானோரிடத்து நடக்கவேண்டிய முறைமைகள் எல்லாவற்றையும் கற்றல்; தொழிற் பெயர். அடங்குதலாவது - உளம் உரை செயல்கள் அடங்கப்பெறுதல். மேகம் சேர் என்பதற்கு மேகத்தின் தன்மையெனின், மேகம் பொருளாகு பெயர். நற்பு - நன்மை என்னும் பண்படி விகாரம். ஆகவே என்பதை ஆகு+அவே என்று பிரித்து நன்மையாகின்ற அத்தொழில்களையே எனக் கூறுதலு முண்டு. அமிர்து - மரணத்தினின்று தவிர்ப்பது. இது சாவா மருந்து, மூவா மருந்து எனப்படும். (4) கல்லாதான் றான்காணு நுட்பமுங் காதிரண்டு மில்லாதார் ளெக்கழுத்தஞ் செய்தலு-மில்லாதா னெல்லாப் பொருளில்லார்க் கீத்தளியா னென்றலு நல்லார்கள் கேட்பி னகை (ப.ரை.) கல்லாதான் - (ஆசிரியனிடத்து கற்கவேண்டிய முறைப்படியே) கல்லாதவனாகிய ஒருவன், தான் காணும் - தானே ஆராய்ந்து காண்கின்ற. நுட்பமும் - நுண்பொருளும், காது இரண்டும் - இரண்டு காதுகளும், இல்லாதாள் - இல்லாதவளாகிய ஒருத்தி, எக்கழுத்தம் செய்தலும் - (தான் மிக்க அழகுடையவளென்று) இறுமாப்படைதலும், இல்லாதான் - கையிற் பொருளில்லாதவன், இல்லார்க்கு - தன்னைப்போற் பொருளற்ற வறியவர்கட்கு, ஒல்லாப் பொருள் - அவர்களின் விருப்பந் தணிவதற்கு பொருந்தாத பொருளை, ஈந்து - கொடுத்து, அளியான் - (தான் வறியவரிடத்து மிகவும்) அருளுடையவன், என்றலும் - என்று தற்பெருமை சொல்லுதலும், நல்லார்கள் -அறிவுடையவர்களாகிய நல்லவர்கள், கேட்பின் - கேட்டால், நகை அவர்கட்குச் சிரிப்பை உண்டாக்கும்;(எ.று)
|