(ப-பொ-ரை) கல்லாதா னொருவன் தான் ஆராய்ந்து காணும் நுண்மைப்பொருளும், காதிரண்டும் இல்லாதாள் அழகுடையேன் என்றெடுத்த முகத்தினளா யொழுகலும், பொருளில்லாதவன் இல்லாதார்க் கீய்த்தளியா னென்றாலும், ஒருவன் தான் தனக்கியன்ற பொருளன்றி யியலாத பொருளை ஈயாதா னென்றலும் அறிவுடைய நல்லோர் கேட்பின் நகையாம். (க-ரை) கல்லாதான் நுட்பம் முதலானவை அறிஞர்க்கு நகைப்பினையே விளைவிக்கும். ஆசிரியனிடத்து நூல்களை முறைபெறக் கல்லாதவன் நுண்பொருளாய்ந்து நுவலப்புகின், நேர் பொருளன்றி இடக்கர்ப் பொருளையே விரிக்க முற்பட்டு அறிஞர் இகழ்ச்சிக்கு உரியவனாவன் என்க. ‘’கல்லாதானொட்பங் கழிய நன்றாயினுங் கொள்ளாரறிவுடையார்,’’ என்ற குறளும். ‘’கற்றதூ உ மின்றிக் கணக்காயர் பாடத்தாற், பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை, நல்லாரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன், புல்லறிவு காட்டிவிடும்’’, என்ற நாலடியும் மேற்படி பொருளை வலியுறுத்துவனவாம். காதுகளே பெண்கள் முகத்துக்கு நகையணிந்து அழகு செய்யும் சிறப்புறுப்பாகும். கல்லாதான் நுட்பம், காதில்லாள் இறுமாப்பு, இல்லாதன் ஒல்லாப் பொருளீதல், அளியானென்றல், நல்லார் கேட்டு நகைத்தல் ஆகிய ஐந்து பொருள்களும் இச்செய்யுளில் அமைந்திருத்தல் காண்க. நுட்பம் - குணவாகு பெயர். ஏக்கழுத்தம் - இறுமாப்பு. ‘’எள்ளு நர்கட் கேக்கழுத்தம் போல இனிதன்றே,’’ என்னும் சிந்தாமணி (காந்தரு 4.) அடியின் பொருளை நோக்குக. அளியான் - தன்மையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி. காதிரண்டும்-உம்மை முற்றுப்பொருள். (5) உடம்பொழிய வேண்டி னுயர்தவ மாற்றீண் டிடம்பொழிய வேண்டுமே லீகை-மடம்பொழிய
|