பக்கம் எண் :

9
கூறின் அவரோடிணங்குவதற்குத் தடையுண்டாமாதலின், “மடம் பொழிய வேண்டி னறிமடம்,“ என்றார். அறிமடமாவது - தான் கூறுவது அறியும் அறிவில்லார் மாட்டு அவரறிய மாட்டாமையைத் தானறிந்தும் அறியாதான் போன்றிருத்தல். அவர் அறியாமையை அவருக்குத் தெரிவிப்பின் பயனில்லை என்றவாறாயிற்று. பாவங்களிற் கொடியது பிறர்மனை விரும்பல் ஆதலின், பிறர்மனை வேண்டேல் என்றார். வள்ளுவரும், “பகைபாவ மச்சம் பழியென நான்கும், இகவாவா மில்லிறப்பான் கண்,“ என்றனர் - ஆற்று என்பது தீபகமாக மூன்றிடங்களிலும் கூட்டப்பட்டது. மனை - மனையாள்; இடவாகு பெயர்.

(6)

படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணி
னிடைதனக்கு நுண்மை வனப்பா-நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு.

(ப.ரை.) படை தனக்கு - நால்வகைப்படைக்கு, யானை வனப்பு ஆகும் - யானைப் படையே அழகாகும், பெண்ணின் - பெண்ணினுடைய, இடைதனக்கு - இடைக்கு, நுண்மை - நுட்பமானது, வனப்பு ஆம் - அழகாகும், நடைதனக்கு - ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு, கோடா மொழி - நடுநிலை தவறாத சொல்லே, வனப்பு - அழகாகும், கோற்கு - செங்கோலுக்கும், அதுவே - அந்தக் கோடா மொழியே அழகாகும், சேவகர்க்கு - போர் வீரர்க்கு, வாடாத - கெடாத, வன்கண் - வீரமானது, வனப்பு - அழகாகும்; (எ.று)

(ப-பொ-ரை) படைக்கு வனப்பாவது யானை, பெண்ணிடைக்கு வனப்பாவது நுண்மை, ஒழுக்கத்துக்கு வனப்பாவது ஒருவற்காகப் பாங்குரையாமை, செங்கோலுக்கு வனப்பாவது ஒருவர்க்குப் பாங்குரையாமை, சேவகரக்கு வனப்பாவது கெடாத வன்கண்மை.