முதுமொழிக் காஞ்சி 1. சிறந்த பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. (பழைய பொழிப்புரை.) கடல் சூழ்ந்த உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்து ஆசாரமுடைமை. (பதவுரை.) ஆர்கலி உலகத்து - கடல்சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மனிதர் எல்லார்க்கும், ஒழுக்கமுடைமை - சதாசாரமுடையவராதல், ஓதலின் - நூல்களைக் கற்றலைக் காட்டிலும், சிறந்தன்று - சிறந்ததாம். "ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்."- ஒளவையார். "மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்."- திருக்குறள். ஆர்கலி - நிறைந்த ஓசை - நிறைந்த ஓசையையுடையது - கடல் : வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. சிறந்தன்று - உடன்பாட்டு இறந்தகால வினைமுற்று : இதில் அன் சாரியை. ஆசாரம் - விலக்கியன ஒழித்து விதித்தன செய்தல் : சீலம்.
|