செய்கையிலும் உறுதியான நிலையில்லாதவருடைய, இயல்பு குணம் - இயற்கையாகிய குணத்தை, பழியார் - எவரும் பழித்துரையார். யாப்பு - (யா + பு) - கட்டு : உறுதி : நிலை. "அது முதற்காயின் சினைக்கையாகும்" என்றபடி, யாப்பிலோரது இயல்பு குணத்தைப் பழியார் என முடித்துக் கொள்ளவேண்டும். ஒருவர் இயல்பாகவே எக்காரியத்திலும் நிலையில்லாதவ ராயின் அவ்வியல்பைப் பழித்துரைத்தலால் பயனில்லை என்பதாம். 2. மீப்பி லோரை மீக்குணம் பழியார். (ப-பொ.) மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும் பழியார். (ப-ரை.) மீப்பு இலோசை - மேன்மைக்குணம் இல்லாதவரது, மீக்குணம் - மேன்மையானவற்றைச் செய்யும் இயல்பில்லாமையை, பழியார் - எவரும் பழித்துரையார். கீழ்மக்களிடம் மேலோர்க்குரிய குணமும் செய்கையு மில்லாமையை எவரும் பழித்துரையார். மீக்குணம் என்பதை மீச்செலவு என்பதுபோல வரம்புகடந்த செய்கையைச் செய்யும் இயல்பு எனக்கொள்வது பொருந்தும். 3. பெருமை யுடையதன் அருமை பழியார். (ப-பொ.) பெருமையுடைய தொன்றனை முடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சி தவிரார். (ப-ரை.) பெருமை உடையதன் அருமை - பெருமையுடைய தொருபொருளை முடித்துக்கொள்ளும் அருமையைப்பற்றி, பழியார் - அவ்வருமையைப் பழித்து முயற்சியை விடார். உடையதன் - உடைய அதன். "அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும், பெருமை முயற்சிதரும்" (திருக்குறள்) ஆகையால் ஒரு பெரிய பொருள் கிட்டுவது அரிதென் றெண்ணி, அதுகாரணமாக அதனை முடித்தற்குரிய முயற்சியைச் செய்யாமலிரார். "பெருமை யுடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமை யுடைய செயல்"- திருக்குறள்.
|