4. அருமை யுடையதன் பெருமைபழியார். (ப-பொ.) அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத் தவிரார். (ப-ரை.) அருமை உடையதன் பெருமை - அருடையுடையதொரு பொருளை அரிதென்று முயற்சிப் பெருமையை, பழியார் - பழித்துத் தவிரார். கிடைத்தற் கருமையான பொருளினது அருமையைப் பழியாமல் அது கிடைத்தற்குரிய கௌரவமான முயற்சிகளைச் செய்வர். "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்."- திருக்குறள். 5. நிறையச் செய்யாக் குறைவினை பழியார். (ப-பொ.) ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும் பழியார். "செய்யாததற்கு முன்பே அக்குறை வினையை" என்றும் "செய்வதற்கு முன் செய்த குறைவினையை" என்றும் பிரதிபேதம் உண்டு. (ப-ரை.) நிறைய செய்யா - நிரம்பச் செய்து முடிக்காத, குறைவினை - குறைவினையை, பழியார் - எவரும் பழித்துரையார். முழுவதும் செய்துமுடியாத குறைவேலையக் கண்டு எவரும் பழித்தல் செய்யார். அவ்வேலை பின்னும் திருத்தமெய்தி நன்கு முடிதல் கூடுமாதலால் அறிவுடையோர் பழியார். 6. முறையி லரசர்நாட் டிருந்து பழியார். (ப-பொ.) நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும் பழியார். (ப-ரை.) முறைஇல் - நீதிமுறை இல்லாத, அரசர் நாடு - அரசருடையநாட்டில், இருந்து - வசித்திருந்து, பழியார் - அவ்வரசர் நீதிமுறை செலுத்தாமையை எவரும் பழித்துரையார். கொடுங்கோலரசருடைய நாட்டில் வசிப்பவர் அக்கொடுங்கோன்மையைப் பழித்துரைத்தால் அவவ்வரசருடைய கொடுமைக்கு உள்ளாவராதலின் அது செய்யார்.
|