நடுவுநிலைமை - "பகைநொதுமல் நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை" என்றும், நடுவு - "ஒருவன் பொருட்குப் பிறன் உரியனல்லன் என்னும் நடுவு" என்றும் உரைப்பர் பரிமேலழகர். 7. செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார். (ப-பொ.) தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப் பழியார். (ப-ரை.) செயத்தக்க - தமக்கு உதவிசெய்தற் குரிய, நல் கேளிர் - நல்ல உறவினர், செய்யாமை - அங்ஙனம் உதவிசெய்யாமையை, பழியார் - நல்லோர் பிறரிடம் பழித்துரையார். கேளிர் என்பது நட்பினரையும் குறிக்கும் கேளிர் என்பதில் இர் - பலர்பால் விகுதி (பெண்டிர் புத்தேளிர் என்பவற்றிற்போல). சுற்றத்தார் உதவிசெய்திலரென்று பழியாமல் அவரைத் தழுவிக் கொண்டுபோதலே சிறப்புடைத்து. கேளிரை நட்பினர் என்று கொண்டால், நட்பினர் உதவிசெய்திலரென்று பழியாமல் நட்பிற் பிழைபொறுத்தலே சிறப்புடைத்து என்பதாம். 8. அறியாத் தேசத் தாசாரம் பழியார். (ப-பொ.) தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார். (ப-ரை.) அறியாத தேசத்து - தான் முன்னறியாத தேசத்தில் வழங்கும், ஆசாரம் - ஒழுக்கங்களை, பழியார் - பழித்துரையார். அந்தந்த தேசத்தின் வசதிக்கும் நிலமிதிக்கும் நாகரிகத்திற்கும் ஏற்றவாறு ஆசாரங்கள் வேறுபடுதலால், தான் முன்னறியாத தேசத்தின்கண் சென்றவன், அங்கு வழங்கும் ஆசாரங்கள் தன்தேசத்தில் வழங்கும் ஆசாரங்களோடு ஒத்திராமையைக் கண்டு, அவைகளைப் பழித்துரைத்த லாகாது. 9. வறியோன் வள்ளிய னன்மை பழியார். (ப-பொ.) வறுமை யுடையானை வண்மையுடையா னல்லனென்று பழியார்.
|