பக்கம் எண் :

13

(ப-ரை.) வறியோன் - பொருளில்லாதவனது, வள்ளியன் அன்மை - ஈகையில்லாமையை, பழியார் - எவரும் பழித்துரையார்.

பொருளுடையவன் பொருளில்லார்க்கு ஈயாமையை எல்லாரும் பழிப்பர் : பொருளில்லாதவன் ஈயாமையை ஒருவரும் பழியார்.

10. சிறியா ரொழுக்கம் சிறந்தோரும் பழியார்.

(ப-பொ.) சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும் கண்டால் பழியார்.

(ப-ரை.) சிறியார் - கீழோருடைய, ஒழுக்கம் - துராசாரத்தை, சிறந்தோரும் - மேலோரும், பழியார் - பழித்துரையார்.

துராசாரம் கீழோருக் கியல்பாதலால் மேலோர் அதனைப் பழித்துரையார்.

IV. துவ்வாப் பத்து.

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையிற் றுவ்வாது.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம் வறுமையின் நீங்கியொழியாது.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - எல்லா மக்களுள்ளும், பழியோர் - பழிக்கப்படுபவரது, செல்வம் - செல்வமானது, வறுமையின் வறுமைத்தன்மையினின்றும், துவ்வாது - நீங்கி யொழியாது.

பழியோர் என்றது "உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும், கெடாஅத நல்லறமுஞ் செய்யார்," "நடுவிகந்தா மாக்கமுடையார்" முதலாயினாரை. பாத்துண்ணாமையாலும் அதனால் இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் பெறாதொழிதலாலும் அவர் செல்வராயிருந்தும் வறியவரையே ஒப்பர்.

நடுவிகந்தாம் ஆக்கத்தை ஒழியவிடாமல் ஈட்டினார் பழிப்புக்கிடமாதலால், அவர் செல்வத்தைப் பழியோர் செல்வம் என்றார்.