பக்கம் எண் :

15

நாணாவது நல்லோர் தமக்கொவ்வாத காரியத்தைக் கண்டவிடத்து அடையும் வெட்கம் : "கருமத்தால் நாணுதல் நாணு." (திருக்குறள்).

வெட்கங்கெட்டு உயிர்வாழ்தலால் உண்டாகின்ற துன்பம் பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறாயதன்று : அதனோ டொத்ததே. துன்ப அளவால் இரண்டும் ஒக்குமாயினும், பசிக்குப் பரிகார முண்டு, அழிந்த நாணுக்கு உயிர்விடுவதன்றி வேறு பரிகாரமில்லை. ஆகவே "உயிரினும் சிறந்தன்று நாணே" என்பது பெறப்படும். படுதலால், "நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால், நாண் துறவார் நாணாள் பவர்" என்பது கருத்தாம்.

4. பேணி லீகை மாற்றலிற் றுவ்வாது.

(ப-பொ.) விருப்பமில்லாத கொடை கொடையை நீக்குதலின் ஒழியாது.

(ப-ரை.) பேண் இல் - விருப்பமில்லாத, ஈகை - ஈகையானது, மாற்றலின் - இல்லையென்று மறுத்துரைத்தலுக்கு, துவ்வாது - வேறாக ஒழியாது.

விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகையாம் : விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது; அதனோடொக்கும் என்பதாம்.

மாற்றல் - கொடாது மறுத்தல்.

A civil denial is better than a rude grant.

5. செய்யாமை மேற்கோள் சிதடியிற் றுவ்வாது.

(ப-பொ.) செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) செய்யாமை - தாம் செய்யத்தகாத காரியங்களை, மேற்கோள் - செய்வோமென்று மேற்கொள்வது, சிதடியின் - மூடத்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது.

செய்யத்தகாத காரியங்களைச் செய்வதாக மேற்கொண்டு தொடங்குவது மூடத்தன்மையின் வேறாகாது.

"செய்தக்க வல்ல செயக்கெடும் : செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்."

"பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்." - திருக்குறள்.

சிதடி - (சிதடு - பேதைமை) - அறிவிலி. "சிக்கர் சிதடர்" எனச் சிறுபஞ்சமூலத்தில் வருகின்றது.