6. பொய் வேளாண்மை புலைமையிற் றுவ்வாது. (ப-பொ.) பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது. (ப-ரை.) பொய் வேளாண்மை - விருப்பமில்லாவிட்டாலும் விருப்பமுடையவர்போல் செய்யும் ஈகையானது, புலைமையின் - நீசத்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது. புலைமை - கீழோரது தன்மை - இழிவு. மனப்பூர்வமாய்ச் செய்யாத உபகாரம் கீழோரது தன்மையின் வேறாகாது. பிரதிஷ்டைக்கு உபகாரம் செய்வோர் நீசர்க்குச் சமானமாவர். "புலையிற் றுவ்வாது" - பாடபேதம். 7. கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது. (ப-பொ.) ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது. (ப-ரை.) கொண்டு - ஒருவரை ஒருவர் நட்பாகக்கொண்டு, கண்மாறல் - பின்பு அவரிடத்துக் கண்ணோட்டம் ஒழிதல், கொடுமையின் - அவருக்குக் கொடுமை செய்தலின், துவ்வாது - நீங்கி யொழியாது. கண்ணோட்டம் - தன்னோடு பழகினவரைக் கண்டால் அவர் கூறியவற்றை மறுக்கமாட்டாமை : இஃது அவர்மேல் கண் சென்றவழி நிகழ்வதாகலின் அப்பெயர் பெற்றது : தாட்சண்ணியம். ஒருவனோடு சிநேகம் பண்ணிப் பின்பு அவனிடம் தாட்சண்ணியம் காட்டாதவர் அவனுக்குக் கொடுமைசெய்தவ ரன்றி வேறாகார். 8. அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது. (ப-பொ.) அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது. (ப-ரை.) அறிவிலி - அறிவில்லாதவனை, துணைப்பாடு - ஒருவன் துணையாகக் கொண்டிருத்தல், தனிமையின் - தனித்திருத்தலின்; துவ்வாது - நீங்கி யொழியாது. அறிவில்லாதவனைத் துணையாகக்கொண்டிருப்பது தனித்திருப்பதற்குச் சமானமேயன்றி வேறாகாது. ஆகவே அறிவில்லாதவனைத் துணைக்கோடல் வேண்டா. சிற்றினம் சேராமல் பெரியாரைத் துணைக்கொள்க. என்பதாம். "துணைநல மாக்கந் தரும்" - திருக்குறள்.
|