பக்கம் எண் :

17

9. இழிவுடை மூப்புக் கதத்திற் றுவ்வாது.

(ப-பொ.) இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது.

"இனிவரவினையுடைய மூப்பு" "பிறரைவெறுத்து"- பாட பேதம்.

(ப-ரை.) இழிவு உடை மூப்பு - இழிவோடுகூடிய மூப்பு, கதத்தின் - கோபத்தின், துவ்வாது - நீங்கி யொழியாது.

கோபம் பிறரால் வெறுக்கத்தக்கதே : இழிவுடை மூப்பும் பிறரால் வெறுக்கத்தக்கதே. ஆகவே இரண்டையும் ஒழித்தல் வேண்டும். நல்லறம் நல்லொழுக்கம் உடையோர் மூப்பு வந்தவிடத்தும் கௌரவ குணங்கள் வாய்ந்திருப்பர். அங்ஙனமான மூப்பு எல்லாராலும் போற்றப்படுவதாகும்.

"மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்."- திருக்குறள்.

10. தானோ ரின்புறல் தனிமையிற் றுவ்வாது.

(ப-பொ.) தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) ஓர்தான் - ஒருவன்தான் மாத்திரமே, இன்புறல் - இன்புற்றிருப்பது, தனிமையின் துவ்வாது - வறுமையின் நீங்கியொழியாது.

பொருளுடையவனாய் எவர்க்கும் உதவாமல் தான் மாத்திரமே இன்புற்றிருப்பவன் பொருளில்லாமையால் தனித்துண்ணும் தரித்திரனுக்குச் சமானமாவதன்றி வேறாகான்.

ஒன்றுமில்லாதவன் இரந்துபெற்றதைத் தனியாக உண்பான் : ஆதலால் அவன் வறுமையைத் தனிமையென்று உபசரித்தார்.

"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்." - திருக்குறள்.