V. அல்லபத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந் தொழுகாதாள் தார மல்லள். (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள் மனையாளல்லள். (ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கு எல்லாம் - மனிதர் எல்லார்க்கும், நீர் அறிந்து - புருஷனுடைய குணத்தை அறிந்து, ஒழுகாதாள் - அதற்கேற்றபடி நடவாதவள், தாரம் அல்லள் - மனைவியாகாள். நீர் - நீர்மை. "கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி" யாகையால், கணவனுடைய குணவிசேடங்களை யறிந்து தக்கபடி நடவாதவள் மனைவியென்கிற பெயருக்கு உரியவளாகாள். 2. தாரமா ணாதது வாழ்க்கை யன்று. (ப-பொ.) மனையாள் மாட்சிமைப்படாத மனைவாழ்க்கை மனைவாழ்க்கை யன்று. (ப-ரை.) தாரம் மாணாதது - மனையாள் மாட்சிமையுடையவளாகப் பெறாத இல்வாழ்க்கை, வாழ்க்கை அன்று - இல்வாழ்க்கை என்னத்தக்க தன்று. மனையாள் மாட்சிமையுடையவளாகப் பெற்ற இல்வாழ்க்கையே இல்வாழ்க்கை யென்று சிறப்பித்துச் சொல்லத்தக்கதாம். "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்."- திருக்குறள். மனையாளுக்கு மாட்சியாவது நற்குண நற்செயல்கள். நற்குணங்களாவன : துறவிகளை ஆதரித்தல், விருந்தினரை உபசரித்தல், ஏழைகளிடத்து அருளுடைமை முதலியன. நற்செய்கைகளாவன : வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களைச் சேகரித்தல், உணவைப் பாகமாக அமைக்குந் திறமை, ஒப்புரவு முதலியன.
|