பக்கம் எண் :

19

3. ஈரமில் லாதது கிளைநட் பன்று.

(ப-பொ.) மனத்தின்கண் ஈரமில்லாதது கிளையுமன்று நட்புமன்று.

(ப-ரை.) ஈரம் இல்லாதது - மனத்தின்கண் அன்பில்லாதது, கிளை (அன்று) - சுற்றமுமன்று; நட்பு அன்று - சினேகமும் அன்று.

உறவினர்க்கும் நட்பினர்க்கும் அன்புடைமை உரிய லக்ஷணம். உள்ளன்பிலாதார் சுற்றத்தாருமாகார், நட்பினரும் ஆகார் என்பதாம்.

"விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்."

"அழிவந்த செய்யினும் அன்பறார், அன்பின்
வழிவந்த கேண்மை யவர்."- திருக்குறள்.

4. சோராக் கையன் சொன்மலை யல்லன்.

(ப-பொ.) பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத் தாங்கமாட்டான்.

சோர்தல் - நெகிழ்தல். சோராக்கையன் - கைநெகிழ்ச்சி யில்லாதவன் - ஒன்றுங் கொடாதவன். சொல் - புகழ். சொன்மலை - மலை போன்ற புகழ் : மிக்க புகழுடையவன்.

(ப-ரை.) சோரா(த)கையன் - பிறர்க்கு ஒன்றுங் கொடாதவன், சொன்மலை அல்லன் - மலைபோன்ற புகழை உடையவனாகான்.

"உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்."- திருக்குறள்.

‘சோரக் கையன்' என்ற பாடத்தைக் களவுசெய்யும் கையையுடையவன் புகழுக் குரியவ னாகான் எனப் பொருத்துகின்றனர். சோரம் - களவு, கை - ஒழுக்கம்; சோரக் கையன் - களவொழுக்க முள்ளவன்.

5. நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன்.

(ப-பொ.) வேறாய் உடன்படாத நெஞ்சத்தோன் நட்டோனல்லன்.

(ப-ரை.) நேரா - ஒற்றுமைப் படாத, நெஞ்சத்தோன் - மனத்தையுடையவன், நட்டோன் அல்லன் - சினேகன் ஆகான்.

மனவொற்றுமை யில்லாதவன் சினேகத்துக்கு உரியவ னாகான்