பக்கம் எண் :

2

2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.

(ப-பொ.) பிறர் தன்மேற் செய்யும் காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்.

(ப-ரை.) காதலின் - ஒருவன் பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும், கண்ணஞ்சப்படுதல் - அவரால் அஞ்சப்படுதல், சிறந்தன்று - சிறந்தது.

பிறருடைய அன்பினும் நன்குமதிப்பே சிறந்தது என்பதாம்.

காதல் - விருப்பம். கண்ணஞ்சுதல் - அஞ்சுதல் : ஒருவன் தான் பெற்றிருக்கும் மதிப்பினாலே பிறர் அஞ்சிநடத்தல். கண்ணஞ்சப்படுதல் - பிறர் அஞ்சி நடக்கத்தக்க நன்குமதிப்பு.

3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை.

(ப-பொ.) தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்க சிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்.

(ப-ரை.) மேதையின் - புத்தி நுட்பத்தால் தானே ஒன்றை அறியும் அறிவைக்காட்டிலும், கற்றது மறவாமை - கற்றநூல்களின் பொருளை மறவாருதிப்பது, சிறந்தன்று - சிறந்தது.

மேதை - அறிவு. கடைப்பிடித்தல் - மறவாதிருத்தல்.

கற்ற கல்வியை மறவாமையானது அறிவு நுட்பத்தைக் காட்டிலும் சிறந்தது. அறிவு நுட்பம் மாத்திரம் அமைத்திருப்து போதாது : கற்ற கல்வியை மறவாமையும் வேண்டும். நுட்பமாகப் பொருள்களை மேலு மேலும் நுனித்தறிய வல்லவனாயினும், ஒருவன் முன் குருமுகமாகக் கற்றதை மறவாமல் போற்றல் வேண்டும்.

4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை.

(ப-பொ.) செல்வத்தினும் மிக்க சிறப்புடைத்து மெய்யுடைமை.

(ப-ரை.) வாய்மை உடைமை - உண்மையுடைமை, வண்மையின் - செல்வமுடைமையைக் காட்டிலும், சிறந்தன்று - சிறந்தது.

வண்மையை ஈகையென்று கொள்வதுமாம்.