9. திறத்தாற்றி னோலா ததுநோன் பன்று (ப-பொ.) தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தக நோலாதது தவமன்று. நோற்றல் - விரதங்காத்தல். (ப-ரை.) திறத்து ஆற்றின் - தத்தம் கூறுபாட்டிற் குரிய வழியில், நோலாதது - காவாத விரதம் நோன்பு அன்று - விரதம் என்கிற கணக்கில் சேர்ந்ததன்று. வருணாச்சிரமத்திற்கு ஏற்ற வழியிலே அனுஷ்டிக்கும் விரதமே விரதமாம் : ஏலாத வழியிலே அனுஷ்டிப்பது விரதமாகாது. 10. மறுபிறப் பறியா ததுமூப் பன்று. (ப-பொ.) மறுபிறப்பை யறிந்து அறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று. (ப-ரை.) மறுபிறப்பு - மறுபிறப்பு நன்கு நடத்தற்குரிய வொழுக்கங்களை, அறியாதது - ஒருவன் அறியாமலே அடைந்த மூப்பானது, மூப்பு அன்று - மூப்பு என்னும் கணக்கிலே சேர்ந்ததாகாது. "இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப் பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து செய்யும் வினையா லறிக இனிப்பிறந் தெய்தும் வினையின் பயன்." "அம்மைத் தாஞ்செய்த அறத்தின் வருபயனை இம்மைத்துய்த் தின்புறா நின்றவர் - உம்மைக் கறஞ்செய்யா தைம்புலனும் ஆற்றுதல் நல்லாக் கறந்துண்டஃ தோம்பாமை யாம்." இவ்வறநெறிச்சார வெண்பாக்களால் கருத்து நன்கு விளங்கும். VI. இல்லைப் பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றிற் பெறும்பே றில்லை. (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற் பெறும் பேறில்லை.
|