(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதர் எல்லாருக்கும், மக்கள் பேற்றின் - புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும், பெறும்பேறு - பெறத்தக்க பாக்கியம், இல்லை - வேறில்லை. மக்கட்பேறு - புத்திர பாக்கியம். மக்கட்பேற்றின் - புத்திரபாக்கியம்போல என்றும் பொருள்படும். "பெரும்பேறு" என்று பாடங் கொண்டால், பெரிய பாக்கியம் என்பதுபொருள். மனிதர் பெறத்தக்க பாக்கியங்களில் புத்திர பாக்கியத்தைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற"- திருக்குறள் மக்களாப் பிறக்கும் பிறவியிற் பெறும்பே றில்லை எனினும் அமையும். 2. ஒப்புர வறிதலிற் றகுவர வில்லை. (ப-பொ.) செய்யக்கடவன் செய்கையோ டொக்கும் தகுதி இல்லை. (ப-ரை.) ஒப்புரவறிதலின் - செய்யக்கடவனவற்றைச் செய்வது போல், தகுவரவு - தக்க செய்கை, இல்லை - வேறில்லை. ஒப்புரவு - உலகநடை, ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து செய்தல். உலகநடை தர்ம சாஸ்திரங்களில் கூறப்படுவதின்றி அவரவர் தாமே அறிந்து செய்யும் தன்மையது. ஆதலால் ஒப்புரவு என்பது அவரவர் தவிர்க்கலாகாமல் செய்யக்கடவனவான செய்கைகள் என்கிற பொருள் பெற்றிருக்கிறது : கடப்பாடுகள் என்பதாம். தகுவரவு - தகுதி : தக்க செய்கை. தத்தம் கடப்பாடுகளைச் செய்வதுபோல் சிறந்த செய்கை வேறில்லை. "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற."- திருக்குறள். 3. வாய்ப்புடை விழைச்சி னல்விழைச் சில்லை. (ப-பொ.) மக்கட்பேறு வாய்த்த கலவிபோலும் கலவியின் நல்ல தில்லை.
|