பக்கம் எண் :

24

6. உணர்வில் னாதலிற் சாக்கா டில்லை.

(ப-பொ.) ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்க டில்லை.

(ப-ரை.) உணர்விலன் ஆதலின் - அறிவிலான் ஆதல்போல, சாக்காடு - மரணம், இல்லை - ஒருவனுக்கு வேறில்லை.

அறிவில்லாதவன் செத்த பிணத்தை ஒப்பான்.

"உரையில னாதலின்" என்ற பாடத்துக்குப் புகழில்லாதவனா யிருத்தலைக் காட்டிலும் என்பது பொருள்.

"வசையொழிய வாழ்வாரே வாழ்வார். இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்."- திருக்குறள்.

7. நசையிற் பெரியதோர் நல்குர வில்லை.

(ப-பொ.) ஆசையின் மிக்கதொரு வறுமை இல்லை.

(ப-ரை.) நசையின் - ஆசையினும், பெரியது - மிக்கதாகிய, ஓர் - ஒரு, நல்குரவு - தரித்திரம், இல்லை - வேறில்லை.

"அதிக ஆசை மிகு தரித்திரம்" என்றது ஓர் பழமொழி.

நல்குரவாவது நுகரப்படும் பொருள் ஒன்றுமில்லாமை. பொருள்களிடத்து ஆசை கொள்ளும்போது அப்பொருள்களில்லாமையே பெரிய குறைவாகத் தோன்றுதலால், ஆசை வறுமைபோன்ற தாகின்றது. அதனாலன்றோ திருவள்ளுவரும் "நல்குர வென்னு நசை" என்றார்.

"வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்"- திருக்குறள்.

8. இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை.

(ப-பொ.) புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை.

எச்சம் - (எஞ்சல் - மிஞ்சல்) - மிஞ்சியிருப்பது : மிச்சமாக இருப்பது. தந்தை முதலியோர் இறக்கும்போது மிச்சமாக வைத்த பொருள். அதை உரையாசிரியர் ‘பிறர் பயப்பதோ ராக்கம்' என்றார் : ஆஸ்தி : செல்வம்.