(ப-ரை.) இசையின் - கீர்த்தியைக் காட்டிலும், பெரியது - சிறந்ததாகிய, ஓர் எச்சம் - ஒப்பற்ற ஆஸ்தி, இல்லை - வேறில்லை. "வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்." (திருக்குறள்) கீர்த்தியைப்போல் சிறந்த செல்வம் இல்லை. 9. இரத்தலி னூஉங் கிளிவர வில்லை. (ப-பொ.) இரந்து உயிர்வாழ்தலின் மேல் கீழ்மை இல்லை. (ப-ரை.) இரத்தலின் - பிச்சையெடுத்து உயிர் வாழ்வதைக் காட்டிலும், ஊங்கு - மேலான, இளிவரவு - இழிவு, இல்லை - வேறில்லை. "ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில்"- திருக்குறள். "இரத்த லின்னூங் கிளிவர வில்லை" : "இரத்திலினூங்காம் - பாடபேதம். 10. இரப்போர்க் கீதலின் எய்துஞ் சிறப்பில்லை (ப-பொ.) இரப்போர்க்குக் கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை. "கொடுப்பதின் மிகத் தாம் எய்தும்"- பாடபேதம். (ப-ரை.) இரப்போக்கு - யாசிப்பவர்க்கு, ஈதலின் - கொடுப்பதைக் காட்டிலும், எய்தும் - ஒருவன் அடைதலான, சிறப்பு - மேன்மை, இல்லை - வேறில்லை. ஈகைபோல் புகழ்தருவது வேறில்லை என்பதாம். "உரைப்பார் உரைப்பவை யெல்லாம். இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்."- திருக்குறள். VII. பொய்ப்பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறிவி னோனினிது வாழாமை பொய். (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
|