"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வூர்தி எய்துப வென்பதம் செய்வினை முடித்து."- புறம். "நிலவரை நீள்புக ழாற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு."- திருக்குறள். 2. உறழ்வெய் யோருக் குறுசெரு வெளிது. (ப-பொ.) பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செரு எளிது. (ப-ரை.) உறழ் - கலகத்தை, வெய்யோருக்கு - விரும்புவோருக்கு, உறு செரு - மிக்க போர், எளிது - எளிதாம். கலகப்பிரியருக்குப் பெரும்போர் எளிதில் நேரும் என்பதாம். உறழ் - முதனிலைத் தொழிற்பெயர். உறு - உரிச்சொல். 3. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை யெளிது. (ப-பொ.) மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப் பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது. (ப-ரை.) ஈரம் - அன்புடைமையை, வெய்யோர்க்கு - விரும்பியிருப்பார்க்கு, நசை கொண்டை - பிறருக்கு விருப்பமாகிய பொருளைக் கொடுப்பது, எளிது - எளிதாம். பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை விரும்பிக் கேட்டாலும் எளிதிற் கொடுப்பர். "ஈரமுடைமை ஈகையி னறிப" (II - பத்து) என இந்நூலில் வருகின்றது. "அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் : அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு."- திருக்குறள். "நாமம் வெய்யோர்க்கு நசைகொடை எளிது" - "நாமம் வெய்யோர்க்கு நசைகுலை வெளிது" - பாடபேதங்கள். 4. குறளைவெய் யோர்க்கு மறைவிரி யெளிது. (ப-பொ.) குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன் மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரை யறிவித்தல் எளிது.
|