பக்கம் எண் :

31

(ப-ரை.) குறளை - கோட்சொல்லை, வெய்யோர்க்கு - விரும்பினோருக்கு, மறை விரி - இரகசியத்தை வெளிப்படுத்தல், எளிது - எளிதாம்.

கோட்சொல்லும் இயல்புடையோர் பிறருடைய இரகசியங்களை எளிதில் வெளியிடுவர்.

குறளை - புறங்கூறுதல். மறை - மறைவானது : இரகசியம். விரி - (விரித்தல்-) முதனிலைத்தொழிற்பெயர் : பரப்புதல் : பலர் அறியச்செய்தல்.

5. துன்பம் வெய்யோர்க் கின்ப மெளிது.

(ப-பொ.) ஒன்றனை முயன்றுவரும் துன்பத்தை வெறாதார்க்கு இன்பமெய்தல் எளிது.

(ப-ரை.) துன்பம் - ஒருகாரியத்தை மேற்கொண்டு முயற்சி செய்வதால் உண்டாகும் துன்பத்தை, வெய்யோர்க்கு - விரும்பிப் பொறுத்தவருக்கு, இன்பம் - அக்காரியம் நன்கு முடிதலால் உண்டாகும் இன்பம், எளிது - எளிதாம்.

ஒரு காரியத்தைச் செய்வதில் உண்டாகும் துன்பத்தை வெறுக்காதவர் அந்தக் காரியம் கடை போகக்கண்டு இன்ப மடைவர்.

"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுத லிலன்."- திருக்குறள்.

6. இன்பம்வெய் யோர்க்குத் துன்ப மெளிது.

(ப-பொ.) முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும் துன்பம் எளிது.

(ப-ரை.) இன்பம் வெய்யோர்க்கு - ஒருகாரியத்தை மேலிட்டுக் கொண்டு முயற்சிசெய்தலால் உண்டாகும் இன்பத்தை விரும்புவாருக்கு, துன்பம் - வறுமை முதலியவற்றால் உண்டாகும் துன்பம், எளிது - எளிதாம்.

முயற்சியால் உண்டாகும் இன்பத்தை விரும்புவோருக்கு வறுமையால் உண்டாகும் துன்பம் ஒரு பொருட்டாகத் தோன்றாது.

7. உண்டி வெய்யோர்க் குறுபிணி யெளிது.

(ப-பொ.) உண்டி மிகவிரும்பினார்க்கு மிக்க பிணி எளிது.