பக்கம் எண் :

32

(ப-ரை.) உண்டி - உணவை, வெய்யோர்க்கு - மிகுதியும் விரும்பினார்க்கு, உறு பிணி - மிக்க நோய், எளிது - எளிதில் வந்தடையும்.

"மீதூண் விரும்பேல்" என்பதாம்.

"இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்."

"தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்."- திருக்குறள்.

8. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி யெளிது.

(ப-பொ.) பெண்டிரை மிக விரும்பினார்க்கு உண்டாகும் பழி எளிது.

"பெண்டிரை விரும்பி அவர் சொல்வழி வருவார்க்குப் படும்பழி எளிது" - பிரதிபேதம்.

(ப-ரை.) பெண்டிர் - பெண்டிரை, வெய்யோர்க்கு - மிக விரும்பினோருக்கு, படு - உண்டாகும், பழி - நிந்தை, எளிது - எளிதாம்.

காமமிக்கவர் எளிதில் நிந்தையடைவர். காமமிகுதியால் பெண் வழிச்சேறலும் பிறன்மனை விழைதலும் ஆகிய ஒழுக்கத்தவறுகள் உண்டாகும் : உண்டானால் உலகத்தில் அபவாதம் மிகும். "மனை விழைவார் மாண்பய னெய்தார்."

"எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி."- திருக்குறள்.

9. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூ ணெளிது.

(ப-பொ.) பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப் பகுத்துண்டல் எளிது.

"பெருமையை விரும்பினார்க்கு" என்றும் பிரதிபேதம் உண்டு.

(ப-ரை.) பாரம் வெய்யோர்க்கு - பிறருடைய பாரத்தைத் தாம் தாங்க விரும்பினோருக்கு, பாத்தூண் - தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்களுக்குப் பகுத்துண்ணுதல், எளிது - எளிதாம்.

பாத்தூண் (பாத்து + ஊண். பாத்து - பகுத்து.) பாத்து என்பதில் பகு என்பதன் மரூஉவாகிய பா பகுதி.