"தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்"- நன்னெறி. ஆதலால் பகுத்துண்டல் அவர்க்கு எளிதென்பதாம். 10. சார்பி லோருக் குறுகொலை யெளிது. (ப-பொ.) நன்னட்பைச் சாராதோர்க்குப் பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது. "சால்பில்லோருக் குறுகொலையெளிது" என்று பாடங்கொண்டு "அமைந்த குணம் இல்லாதார்க்கு மிகவும் உயிர்க்கொலை எளிது" என்றுரைக்கின்றது ஒரு பிரதி. (ப-ரை.) சார்பு இலோருக்கு - நல்ல நட்பாகிய சார்பு இல்லாதவர்க்கு, உறு கொலை - பொருந்திய கொலைத்தொழில் செய்தல், எளிது - எளிதாம். "மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும், இனந்தூய்மை தூவா வரும்" (திருக்குறள்) ஆதலால், நற்சார்பு இல்லார் கொலை முதலிய தீச்செயல்களை எளிதிற் செய்வர். IX. நல்கூர்ந்த பத்து. 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையி லரசனாடு நல்கூர்ந் தன்று. (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும், முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும். (ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதரெல்லார்க்கும், முறை இல் - நீதி முறை இல்லாத, அரசன் நாடு - அரசனது நாடானது, நல்கூர்ந்தன்று - வறுமையுடையதாம். "இயல்புளி கோலோச்சும் மன்னவ னாட்ட பெயலும் விளையுளும் தொக்கு." "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்." "நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும்."- திருக்குறள்.
|