(ப-ரை.) கற்பு - ஒருவர் கல்வி உடையராதல், குலன் உடைமையின் - நற்குடிப் பிறப்பு உடையராதலைக் காட்டிலும், சிறந்தன்று - சிறப்புடையது. உயர்குடிப் பிறப்பினும் சிறந்தது கல்வி. "மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர் பாடு". - திருக்குறள். "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும், கீழ்ப்பா லொருவன் கற்பின், மேற்பா லொருவனும் அவன்கட் படுமே".- புறம். 8. கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. (ப-பொ.) தான் ஒன்றைக் கற்குமதனினும் சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல். (ப-ரை.) கற்றாரை - கல்வியறிவுடையாரை, வழிபடுதல் - உபசரித்தொழுகுதல், கற்றலின் - ஒன்றைக் கற்பதைக் காட்டிலும், சிறந்தன்று - சிறந்ததாம். ஒருவன் கற்றலும் வேண்டும்; கற்றாரை வழிபடுதலும் வேண்டும் : இவ்விரண்டிலும் வழிபாடு சிறந்ததாம். வழிபாடு செய்தலால் குருவருள் உண்டாகும் : அஃதுண்டாகவே தான் கற்கலுற்றது கைகூடும். தண்டாப்பத்திலும் இந்நூல், "கற்றல் வேண்டுவோன் வழிபாடு தீண்டான்" என்றுரைக்கின்றது. "தேவரனையர் புலவரும்; தேவர் தமரனையர் ஒரூர் உறைவார்; தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார்; கற்றன்னர் கற்றாரைக் காதலவர்"- நான்மணிக்கடிகை. 9. செற்றாரைச் செலுத்தலிற் றற்செய்கை சிறந்தன்று. (ப-பொ.) பகைவரைச் செலுத்தலினும் மிக்க சிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல். (ப-ரை.) தற்செய்கை - தன்னைப் பெருகச்செய்தல், செற்றாரை - பகைவரை, செறுத்தலின் - தண்டித்தலினும், சிறந்தன்று - சிறப்புடையதாம்.
|