தற்செய்கை - தன்னைப் பகைவரினும் பெருகச் செய்தல் : அதாவது அங்கங்களை அபிவிர்த்தி செய்தல். அரசன் தன் அங்கங்களை அபிவிரித்தி செய்தால் பகைவர் தாமே அஞ்சி அடங்குவர் : தண்டோபாயத்தை அனுசரிக்கும் அவசியம் இல்லை. ஆகவே பகைவரைத் தண்டிக்கப் புகுவதைக் காட்டிலும் அரசன் தன் அங்கங்களைப் பலப்படுத்துவதே சிறப்புடையது என்பதாம். "செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்".- திருக்குறள். 10. முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று. (ப-பொ.) செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின் அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து. (ப-ரை.) முன்பெருகலின் - செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின் அழிதலைக்காட்டிலும், பின் சிறுகாமை - உள்ள அளவில் பின் குறையாமை, சிறந்தன்று - சிறப்புடையதாம். செல்வம், உள்ள அளவினும் ஓங்கி வளர்ந்து அழிவதைக் காட்டிலும், உள்ள அளவிற் குறையாதிருப்பதே சிறந்தது. "தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர், நிலையின் இழிந்தக் கடை" (திருக்குறள்) ஆகையால், நின்ற நிலையில் தாழாமையே சிறந்தது. ஆகவே நின்ற நிலையில் தாழாதபடி முயற்சிசெய்தல் வேண்டும் என்பதாம். -------- II. அறிவுப்பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரிற் பிறந்தமை ஈரத்தி னறிப. (ப-பொ.) கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப் பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர். (ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மனிதர் எல்லாருள்ளும், பேரில் பிறந்தமை - ஒருவன்
|