பக்கம் எண் :

6

பெருங்குடியிற் பிறந்ததை, ஈரத்தின் - உயிர்களிடத்தில் அவனுக்குள்ள அன்பினால், அறிப - அறிவர்.

"நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக், குலத்தின் கண் ஐயப் படும்" (திருக்குறள்) ஆகையால், ஒருவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதற்கு அவனிடத்துள்ள கருணையே அறிகுறி.

2. ஈர முடைமை ஈகையி னறிப.

(ப-பொ.) ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும் கொடையினானே அறிவர்.

(ப-ரை.) ஈரம் உடைமை - ஒருவன் மனத்தில் கருணையுடையவன் என்பதை, ஈகையின் - ஏழைகளுக்குக் கொடுப்பதனால், அறிப - அறிவர்.

ஒருவனிடத்துக் கருணை உண்டு என்பதற்கு அவனுடைய ஈகையே அறிகுறி.

3. சோரா நன்னட் புதவியி னறிப.

(ப-பொ.) ஒருவன் தப்பாத கடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன் நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.

(ப-ரை.) சோரா நல் நட்பு - ஒருவன் தளராத நல்ல சிநேகம் உடையவன் என்பதை, உதவியின் - அவன் தனது சிநேகருக்குச் செய்யும் உதவியினால், அறிப - அறிவர்

சோரா - இளையாத உறுதியுள்ள.

ஒருவர் ஒருவரோடு உறுதியான நட்புடையவர் என்பதற்கு அவர் அவருக்கு ஆபத்திலே செய்யும் உதவியே அறிகுறி. "ஆபத்திலே அறியலாம் அருமை சினேகிதனை" என்றது ஓர் மூதுரை.

"உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."- திருக்குறள்.

4. கற்ற துடைமை காட்சியி னறிப.

(ப-பொ.) ஒருவனது கல்வியை அவன்றன் அறிவினானே அறிவர்.