பக்கம் எண் :

7

(ப-ரை.) கற்றது உடைமை - ஒருவன் கல்வியுடையனாயிருத்தலை, காட்சியின் - அவனுடைய அறிவினாலே, அறிப - அறிவர்.

காட்சி - அகக்கண்ணாற் காணுதல் : அறிவு.

"மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" ஆகையால், ஒருவன் கற்ற கல்வியின் அளவிற்கு அவனுடைய அறிவின் அளவே அறிகுறி.

5. எற்ற முடைமை எதிர்கோளி னறிப.

(ப-பொ.) ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானே அறிவர்.

எற்றம் - உய்த்தல். எதிர்கோள் - (எதிர்த்தல் - முற்படுதல்) முற்கொண்டு பாதுகாக்கும் காப்பு.

(ப-ரை.) எற்றம் உடைமை - ஒரு காரியத்தை ஒருவன் ஆராய்ந்து முடிக்க வல்லவன் என்பதை, எதிர்கோளின் - இடையூறுகள் வருவதற்கு முன்னே அவன் செய்யும் பாதுகாவலால், அறிப - அறிவர்.

ஒருவன் காரிய முடிக்கவல்லவன் என்பதற்கு, அக்காரியத்தில் வருதலான இடையூறுகளை யறிந்து அவன் செய்யும் பாதுகாப்பே அறிகுறி என்பதாம்.

"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்"

"வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை"- திருக்குறள்

"ஏற்றமுடைமை" என்று பாடங்கொண்டு, ஒருவன் குடிப்பிறப்பு முதலிய உயர்வுடையன் என்பதை அவன் தன்னிடம் வருவாரை எதிர்கொண்டு செய்யும் உபசாரத்தால் அறிக என்றும் பொருளுரைப்பர். அவ்வுபசாரங்கள் "இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறிந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார்" (நாலடியார்) என்பதனால் அறியப்படும்.

6. சிற்றிற் பிறந்தமை பெருமிதத்தி னறிப.

(ப-பொ.) சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானே அறிவர்.

(ப-ரை.) சிற்றில் பிறந்தமை - ஒருவன் இழிகுடியிற் பிறந்தவன் என்பதனை, பெருமிதத்தின் - அவனுடைய காவத்தினால், அறிப - அறிவர்.