"(பெருமை பெருமித மின்மை) சிறுமை, பெருமிதம் ஊர்ந்து விடல்" ஆதலால், ஒருவன் இழிகுடியில் பிறந்தவன் என்பதற்கு அவன் கொண்டுள்ள கர்வமே அறிகுறியாகும். "பணியுமாம் என்றும் பெருமை : சிறுமை அணியுமாம் தன்னை வியந்து"- திருக்குறள். 7. குத்திரஞ் செய்தலிற் கள்வனாத லறிப. (ப-பொ.) ஒருவனை ஒருவன் படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர். குத்திரம் - படிறு, வஞ்சகம். (ப-ரை.) குத்திரம் செய்தலின் - ஒருவன் ஒருவருக்குச் செய்யும் வஞ்சகச் செயலால், கள்வன் ஆதல் - அவன் திருடன் என்பதை, அறிப - அறிவர். ஒருவன் களவு செய்யும் கருத்தினன் என்பதற்கு அவனுடைய வஞ்சகச் செயலே அறிகுறி.
"அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சிற் கரவு."- திருக்குறள். 8. சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப. (ப-பொ.) சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடைய எல்லாச் சோர்வையும் அறிவர். சோர்வு - வழுவுதல். சொற்சோர்வு - சொல்ல வேண்டுவதை மறப்பான் ஒழிதல். (ப-ரை.) சொற்சோர்வு உடைமையின் - ஒருவன் சொல்லும் சொற்களில் தவறுதல் உடையனாதலால், எ சோர்வும் - அவனிடத்துள்ள எல்லாத் தவறுகளையும், அறிப - அறிவர். ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு அவனுடைய சொற்சோர்வே அறிகுறி. "சொற்சோர்வுபடேல்" - ஒளவையார். "சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன் மாண்பினிதே."- இனியா நாற்பது.
|