9. அறிவுசோர் வுடைமையிற் பிறிதுசோர்வு மறிப. (ப-பொ.) ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன் என்ப தறிவர். (ப-ரை.) அறிவு சோர்வு உடைமையின் - ஒருவன் அறிவு தளர்ச்சியுடையனா யிருத்தலால், பிறிது சோர்வும் - அவனிடத்துள்ள ஏனைத் தளர்ச்சிகளையும், அறிப - அறிவர். ஒருவன் பலவகைத் தளர்ச்சிகளையும் உடையவன் என்பதற்கு அவனுடைய அறிவின் தளர்ச்சியே அறிகுறி. 10. சீருடை யாண்மை செய்கையி னறிப. (ப-பொ.) ஒருவன் புகழுடைய ஆண்வினைத் தன்மையை அவன் செய்கையான் அறிவர். (ப-ரை.) சீர் உடை - புகழ்பொருந்திய, ஆண்மை - (ஒருவனது) ஆண்மையை, செய்கையின் - அவனுடைய செய்கையால், அறிப - அறிவர். ஒருவன் ஆண்மையுடையவன் என்பதற்கு அவனுடைய செயல்களே அறிகுறியாம். ஆண்மை - (ஆண் + மை) - ஆடவர் தன்மை : பௌருஷம் : வீரம் ஆள் + மை எனக்கொண்டு, ஆளுந்தன்மை ஆள்வினைத் தன்மை என்றலுமாம். III. பழியாப்பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்புகுணம் பழியார். (ப-பொ.) கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும் பழியார். (ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மக்கள் எல்லாருள்ளும், யாப்பு இலோரை - யாதொரு
|