ஏலாதி மூலமும் விருத்தியுரையும் சிறப்புப் பாயிரம் இல்லறநூ லேற்றதுறவறநூ லேயுங்கால் சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து - நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங் கணிமேதை செய்தான் கலந்து. (இதன் பொருள்.) நல்ல - சிறந்த, அணி மேதையாய் - அழகிய அறிவினையுடையவளே!, கணிமேதை - கணிமேதையென்னும் புலவர், இல்லற நூல் - இல்லறவொழுக்கங் கூறும் நூலையும், ஏற்ற துறவற நூல் - பொருத்தமான துறவற வொழுக்கங்கள் கூறும் நூலையும், ஏயுங்கால் - ஏற்ற விடங்களில், வீட்டு நெறியும் கலந்து - வீடெய்தும் நெறிபற்றிய உரைக்கூறுகளையும் ஆராய்ந்து, நல்ல - மேலான, சொல் அறநூல் - பாராட்டப்படும் ‘ஏலாதி' யென்னும் இவ் வறநூலை, சோர்வு இன்றி - குற்றமில்லாமல், தொக்கு உரைத்து - தொகுத்துக் கூறி, செய்தான் - இயற்றினான். (பழைய பொழிப்புரை.) சிறந்த அழகாகிய அறிவை யுடையாளே! கணிமேதை என்னும் புலவர் இல்லற நூலும் ஞானமடைதற்குரிய துறவற நூலும் ஆகிய கடவுளாற் சொல்லப்பட்ட அறநூல்களின் பொருள்களையும் தளர்ச்சியின்றித் தொகுத்துக் கூறி ஏற்றவிடத்தில் வீடடைதற்குரிய ஞான வழியையும் உடன் கூட்டி அந்நூலை யியற்றி யருளினார். (கருத்து.) கணிமேதை. ‘ஏலாதி' யென்னும் உயர்ந்த அறநூலை இயற்றினான். சோர்வு - குற்றம். கணிமேதை : அன்மொழித்தொகைக் காரணப்பெயர். கலந்து, ஈண்டு ஆராய்ந்து என்னும் பொருட்டு.
|