பக்கம் எண் :

12

குணங்களாலு மிக வமைவுடையனாமன்றி யவாவறா தொழியுமாயி னைம்பொறியென்னுங் களிற்றா லலைப்புண்டு நரகவாயிலுட்டுன்பமுற்றுச் செல்லும்.

(க-து.) அவா வறுத்தலாவது, ஐம்பொறி யடக்கமாகும்.

‘அவ்வைந்தி' னென்பதன் அகரச் சுட்டை ‘ஐங்களிற்றி' னென்பதோடு சேர்த்துரைக்க. தளரான் : முற்றெச்சம். பொறிகளைக் களிறென்றமையின், அவற்றின் புலன்களை அக் களிறுகளின் றுதிக்கைப் புழைகளென்றா ரென்க. ‘புலந்து போகு' மென்பதைப் போய்ப் புலக்குமென மாற்றி யுரைக்க. ஐம்புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். ஆட்டு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

(11)

12. கொலைக்களம் வார்குத்துச் சூதாடு மெல்லை
அலைக்களம் போர்யானை யாக்கு - நிலைக்களம்
முச்சா ரிகையொதுங்கு மோரிடத்து மின்னவை
நச்சாமை நோக்காமை நன்று.

(இ-ள்.) கொலைக்களமும் - கொலை பயிலுமிடமும், வார்குத்தும் - வெள்ளம் பெருகிச் சுழியும் நீர் நிலைகளும், சூது ஆடும் எல்லையும் - சூதாடு கழகமும், அலைக்களமும் - பிறரை வருத்துஞ் சிறைச் சாலையும், போர் யானை - போர் செய்ய வல்ல யானைகளை, யாக்கும் நிலைக்களம் - பழக்குகின்ற இடமும், முச்சாரிகை ஒதுங்கும் - யானை, தேர், குதிரை யென்னும் மூன்றும் ஓட்டம் பயிலுகின்ற, ஓர் இடத்தும் - ஒருவகை இடமும் இன்னவை - என இவை தம்மை, நச்சாமை - விரும்பாமையும், நோக்காமை - போய்ப் பாராமையும், நன்று - நல்லது.

(ப-பொ-ரை.) பொருது கொல்லுங் கொலைக்களமும் வார்குத்துமிடமும், சூதாடுமிடமும், தண்ட முதலாயினவற்றாலலைக்குஞ் சிறைக்களமும், போர் யானைகளைக் கொலை கற்பிப்பானுக்கு நிலையிடங்களும், யானை, தேர், குதிரையான மூன்று திறமுஞ் சாரிகையாக வோடு மோரிடத்துஞ் செல்லுதற் குடன் படாமையும் அவை சென்று நோக்காமையும் நல்வினையாம்.