பக்கம் எண் :

14

களையாமையுமாகிய இவ்வாறும் துறவின்பாற்பட்டார் கொண்டொழுகு மொழுக்கங்கள், நூற்பட்டார் பூங்கோதாய்!

(க-து.) விளையாமை முதலியன துறவற வழிப்பட்டாரொழுகும் பண்புகளாம்.

விளையாமை - பிறர்க்கு ஊறு செய்யாமை; உண்ணாமை - எதனையும் பற்றொடு நுகராமை என்பாருமுளர். வென்று, ஈண்டுத் தொழிற் பெயராகக் கொள்க. இது முதனிலைத் தொழிற் பெயராகாது, புடைபெயர்ச்சி விகுதி. ‘உட்குடைத்தாவன' வென்பது கடை குறைந்து உட்குடைத்தாவென நின்றது. உட்கு: முதனிலைத் தொழிற்பெயர். நூலிற் கோக்கப்படுங்காற் பேரரும்பாய்க் காணப்பட்டுப் பின் மலர்தலின், ‘நூற்பட்டார் பூ' எனப்பட்டது. நூல் பட்டு என்பதற்குச் சாமுத்திரிகை நூலின் இலக்கணம் அமைந்து எனவுமாம்.

(13)

14. பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன
செய்யான் சிறியா ரினஞ்சேரான் - வையான்
கயலியலுண் கண்ணாய் கருதுங்கா லென்றும்
அயல வயலவா நூல்.

(இ-ள்.) கயல் இயல் - கயல் மீனின் இயல்பினையுடைய, உண் கண்ணாய் - மையணிந்த கண்களையுடைய பெண்ணே!, என்றும் - எப்பொழுதும், பொய்யான் - பொய் சொல்லாமல், புலாலொடு - ஊனுண்ணலும், கள் - கள்ளுண்ணலும், போக்கி - ஒழித்து, தீயன செய்யான் - தீய செயல்களைச் செய்யாமலும், சிறியார் இனம் சேரான் - சிறியாரது கூட்டத்தைச் சேராமலும், வையான் - பிறரை நிந்தியாமலும் ஒருவன் ஒழுகுவானாயின், கருதுங்கால் - உற்றுநோக்கு மிடத்து அவனுக்கு, நூல் - அறிவு நூல்கள், அயல அயல - வேண்டுவனவல்ல.

(ப-பொ-ரை.) பொய்யுரையாது புலாலையுங் கள்ளையுமுண்டல் களைந்து தீவினைகளைச் செய்யாது சிறியாரினத்தைச் சேராது பிறர்க்கின்னாதன ஒருவன் சொல்லானாயினென்று மாராயுங்கா லவற்குப் பிறராய்ந்த நூலினறிவால் பயனில்லை கயலுண் கண்ணாய்!

(க-து.) பொய்யாமை முதலிய இயல்புகளை யுடையவன் அறிவு நூல்கள் ஆராய்ந்தவனை ஒப்பான்.