கயலிய லுண்கண் என்றவிடத்துப் பிறழ்ச்சியாகும் பொதுத்தன்மை தொக்குநிற்றலின் தொகையுவமையணி. கயலினியல்பு, பிறழ்தல். மகளிர் கண்கள் நிலை பிறழ்ந்து நோக்கும் இயல்பினவாதலுங் காண்க. ஒடு : எண்ணுப் பொருளில் வரும் இடைச்சொல் . அயலென்பது வேண்டாமைமேனின்றது. அடுக்கு துணிவுப் பொருளதென்க. ஆம் : அசை. சிறியராவார் - இருவினைப் பயனுமில்லை யென்பார், மோசஞ் செய்வார், காமநூலுணர்ந்தொழுகுவார். (14) 15. கண்போல்வார்க் காயாமை கற்றா ரினஞ்சேர்தல் பண்போல் கிளவியார்ப் பற்றாமை - பண்போலும் சொல்லார்க் கருமறைசோ ராமை சிறிதெனினும் இல்லார்க் கிடர்தீர்த்த னன்று. (இ-ள்.) கண் போல்வார் - கண் போன்ற நண்பரை, காயாமை - தவறுசெய்த விடத்துச் சினவாமையும், கற்றார் இனம் - கற்று வல்ல பெரியார் கூட்டத்தை, சேர்தல் - சேர்ந்து இணங்குதலும், பண்போல் கிளவியார் - யாழிசை போன்ற மொழிகளை யிசைக்கின்ற பெண்டிரை, பற்றாமை - பின்பற்றாமையும், பண்போலும் சொல்லார்க்கு - இசைபோலு மொழியையுடைய மாதர்க்கு, அருமறை - அருமையான மறைபொருள்களை, சோராமை - மறந்துஞ் சொல்லாமையும், சிறிது எனினும் - சிறிதாயினும், இல்லார்க்கு - இல்லை என்பார்க்கு இடர்தீர்த்தல் - கொடுத்து இடுக்கண் நீக்குதலும், நன்று - நல்லவாம். (ப-பொ-ரை.) ஒருவன் றனக்குக் கண்போலு நட்டாரைக் காயாமையும், கற்றாரினஞ் சேர்தலும், அரிவையரை மிக அன்பு செய்யாமையும், அவர்க்கு மறை யுரையாமையும் வறியார்க்குச் சிறிதிடராயினும் தீர்த்தலுமாகிய வாறும் நல்ல குணம், (க-து.) கண்போல்வார்க் காயாமை முதலியன நல்லவாம். கண்கள் தம்மை யுடையானுக்குக் கதிரொளியினை அறிவித்து வழி காட்டுமாறு போல், சிறந்த நண்பன் ஒருவனுக்குத் திருவருளொளியனைப் புலப்படுத்தி நல்லொழுக்க நெறியினைக் காட்டுதலின்அவன் ‘கண்போல்வா' னெனப்பட்டா னென்க. அன்றிவாளா அருமையுடையா னெனினுமாம். காயாமை, பழைமை நினைந்தென்க.
|