"பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின்" என்பர் (பழைமை-5) திருவள்ளுவனாரும். மென்மையும் இனிமையுங்கருத்தைப் புலப்படுத்திப் பிறருள்ளத்தைப் பிணிக்கும் ஆற்றலும் பொருந்திய கிளவி, ‘பண்போற் கிளவி' யென்க. யாழினிசைக்கு இவையனைத்தும் உண்மையாதலுங் காண்க. கிளவி : தொழிற்பெயர். கிள : பகுதி. மறை : மறு என்னும் வினையடியாகப் பிறந்த பெயர்; ஐ : செயப்படு பொருண்மை விகுதி. (15) 16. துறந்தார்கட் டுன்னித் துறவார்க் கிடுதல் இறந்தார்க் கினிய விசைத்தல் - இறந்தார் மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல் இறுதலில் வாழ்வே யினிது. (இ-ள்.) துறந்தார்கண் துன்னி - துறந்தார் நிலையிற் பொருந்தி, துறவார்க்கு - அங்ஙனந் துறவாமல் இரப்பவர்க்கு, இடுதல் - வேண்டுவன கொடுத்தலும், இறந்தார்க்கு - கல்வி முதலியவற்றாற் சிறந்தவர்க்கு, இனிய இசைத்தல் - நன்மொழிகளைச் சொல்லுதலும், இறந்தார் - துணையற்று இறந்தவர்களையும், மறுதலை - தனக்குத் தீமை செய்தவர்களையும், சுற்றம் - உறவினரையும், மதித்து ஓம்புவானேல் - கருத்து வைத்துப் பாதுகாப்பானாயின், இறுதல் இல் - நன்மை அழிதலில்லாத, வாழ்வே - இல்லற வாழ்க்கையே, இனிது - துறவறத்தினும் நல்லது. (ப-பொ-ரை.) மனைத் துறந்த வருந்தவரைச் சேர்ந்து, துறவார்க் கீதலைச்செய்து கல்வியில் மிக்கார்க் கினியவற்றை மருவிச் செய்து, தான் குடிப்பிறந்த வருந்தவரைச் சேர்ந்து, குடியு ளிறந்தாரையும், தனக்கின்னாதாரையு மதித்தவர்க்கு வேண்டுவன செய்வானாயி னிறுதலில் வாழ்வே துறவறத்தினுமினிது. (க-து.) துறவற வொழுக்கத்தை இல்வாழ்க்கையினின்றே செய்யின், அவ்வில்வாழ்க்கை புறத்துறவினுஞ் சிறந்தது. ஐம்பொறிகளானும் நுகர்தற்குரிய எல்லாப் பொருள்களுமிருந்துந், துறவறத்தோடு பொருந்தினாரென்பார், ‘துறந்தார்கட்டுன்னி' யெனவும், அங்ஙனம் அவ்வைம்பொறி நுகர்ச்சிக்குரிய
|