பக்கம் எண் :

17

பொருள்கள், ஏதுமில்லாராயிருந்துந் துறவாது நிற்பாரென்பார், ‘துறவா' ரென்றுங் கூறினார். இறந்தார் - கடந்தவர்; ஈண்டு மேம்பட்டவரென்பது கருத்து. இனிய : குறிப்புவினையாலணையும் பெயர். மறுதலை - பகைமை, இங்குப் பண்பாகுபெயராய் நின்றது; தலை : பகுதிப் பொருள் விகுதி. சுற்றம் - அம், வினைமுதற்பொருள் விகுதி.

"அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்"

(இல்வாழ்க்கை - 6) என்னுஞ் செந்நாப் புலவர் கூற்றோடு இச்செய்யுட்பொருள் ஒத்து நிற்றல் காண்க.

(16)

17. குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பு மாற்ற லுடைமை - முடியோம்பி
நாற்றஞ் சுவைகேள்வி நல்லா ரினஞ்சேர்தல்
தேற்றானேற் றேறு மமைச்சு.

(இ-ள்.) குடி ஓம்பல் - குடிகளைப் பாதுகாத்தலும், வன் கண்மை - தொழின் முகத்தில் ஆண்மையும், நூல் வன்மை - நூற்புலமையிற் கலங்காத அறிவும், கூடம் மடி - கரவுஞ் சோம்பலும், ஓம்பும் - தன்மாட்டு நிகழாதவாறு பாதுகாக்கும், ஆற்றல் உடைமை - வன்மை யுடைமையும் பொருந்தி, முடி ஓம்பி - அரசாட்சியைப் பாதுகாத்து, நாற்றம் - மணத்தையும், சுவை - சுவைக்கினிய உணவையும், கேள்வி - இசைக் கேள்வியையும், நல்லார் இனம் சேர்தல் - மாதர் கூட்டத்தைச் சேர்ந்து மெய்யுறுதலையும் தேற்றானேல் - நன்மை தருவனவென்று துணியானாயின், அமைச்சு - அவன் அமைச்சனாதற் குரியானென்று, தேறும் - தெளியப்படுவன்.

(ப-பொ-ரை.) குடிகளைப் பாதுகாத்தலும், வன்கண்மையுடையவனாதலும், பல நூலுங் கற்ற வன்மையும், வஞ்சனையுடையனாதலும், சோம்பு தன்மாட்டு வாராமையும், பாதுகாக்கு மாற்றலுடைமையு மென்கின்ற வைந்து முடையனாய் முடியுடையரசனாலோம்பி விரும்பப்படு நாற்றமுஞ் சுவையுங் கேள்வியும் விரும்பி நல்லாரினத்தைச் சேர்தல் செய்யானாயி னவன் அரசர்க்கமைச்சனாகத் தேறப்படுவான்.