பக்கம் எண் :

18

(க-து.) குடியோம்பல் முதலியன அமைச்சர்க்குரிய இயல்புகளாகும்.

‘பொருந்தி' யென ஒரு சொல் வருவித்துக்கொள்க. ‘நாற்றஞ்சுவைகேள்வி நல்லாரினஞ் சேர்தல் தேற்றா' னென்றது, ஐம்புல வடக்கமுடையா னென்றற்கு.

(17)

18. போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கள்
சோகம் படுஞ்சூதே சொல்வன்மை - சோகக்
கடுங்கதத்துத் தண்ட மடங்காமை காப்பின்
அடுங்கதமி லேனை யரசு.

(இ-ள்.) போகம் - இன்ப நுகர்ச்சியும், பொருள் கேடு - பொருளழிதலும், மான் வேட்டம் - விலங்குகளை வேட்டையாடுதலும், பொல்லா கள் - தீமையைத் தருங் கள்ளுண்ணலும், சோகம் படும் சூது - துன்பம் விளைக்கின்ற சூதாடலும், சொல்வன்மை - வன்சொற் கூறலும், சோகம் கடும் கதத்து - வருத்தந்தருகின்ற மிக்க சினத்தினால், தண்டம் - போர் செய்தலும், அடங்காமை காப்பின் - தன்மாட்டுப் பொருந்தாமல் அரசன் பாதுகாப்பானானால், ஏனை அரசு - மற்ற அரசர்கள், அடும் கதம் இல் - இவ்வரசனோடு போர் செய்யும் சினமிலராவர்.

(ப-பொ-ரை.) மகளிரோடு நுகரும் போகமும், தான் தேடிய பொருளைப் பாதுகாவா தழித்துக் கொடுத்தலும், மான் வேட்டையாடுதலும், பொல்லாக் கள்ளினை நுகர்தலும், துன்பம் விளையப்படும் சூதாடுதலும், வன்சொற்சொல்லுதலும், துன்பத்தைச் செய்யும் மிக்க கோபத்தாற் பிறந்த தண்டஞ் செய்தலுமென்கிற இவ்வேழு முறா வின்ப வரசன் பகையரசரடுங் கோபமுளவாகான்.

(க-து.) போகம் முதலியவற்றிற் கருத்தீடுபடாத அரசனுக்குப் பகை யரசர்கள் ஏற்படார்.

பொருள்கேடு : எழுவாய்த் தொடர். சூதே என்பதன் ஏகாரம் எண்ணேகாரமாகலின், ஏனையவற்றிற்குங் கூட்டுக. இச்செய்யுள் போன்று சில செய்யுள்களில் ஆறுக்கு மேல் ஏழு பொருளும் வரும். வந்தால் ஏலாதி ஆறு பொருளுடன் கண்ட சருக்கரை யொன்று கூட்டுதலுண்மையின் ஏழாவது பொருளும் கூறப்பட்ட தென்க.

(18)