பக்கம் எண் :

19

19. கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்
செல்லான் சிறியா ரினஞ்சேரான் - சொல்லும்
மறையிற் செவியிலன் றீச்சொற்கண் மூங்கை
இறையிற் பெரியாற் கிவை.

(இ-ள்.) கொல்லான் - ஓருயிரையுங் கொலைசெய்யான், கொலைபுரியான் - பிறர் கொலைசெய்தலையும் விரும்பான், பொய்யான் - பொய் சொல்லான், பிறர் மனைமேல் - பிறர்க்குரிய மனைவி மேல், செல்லான் - தனக்குரிமை விரும்பான், சிறியார் இனம் - கீழ்மக்கள் கூட்டத்தை, சேரான் - இணங்கான், சொல்லும் - மறைவாய்ச் சொல்லப்படுகின்ற, மறையில் - மறை பொருள்களில், செவி இலன் - செவிகொடான்,தீச்சொற்கள் - தீய சொற்களைப் பேசுதலில், மூங்கை - ஊமை, இவை - ஆகிய இவ்வியல்புகள், இறையில் - பெருந் தன்மையில், பெரியாற்கு - பெரியவனுக்கு (உரியவாம்)

(ப-பொ-ரை.) தானொன்றனைக் கொல்லான், பிறர் கொன்ற கொலையினை விரும்பான், பொய் சொல்லான், பிறர் மனையாண்மேற் செல்லான், கீழ்மக்களினஞ் சேர்தலை மாட்டான், பிறர் மறை கூறுமிடத்தின் செவி கொள்ளானாய், பிறரைத் தீச்சொற் சொல்லுமிடத்து மூங்கைபோலொழுகு முதன்மையிற் பெரியார்க் கிவ்வேழ் திறமுமாம்.

(க-து.) கொல்லாமை முதலியன பெருந்தன்மையுடையான்பாற் காணப்படும்.

புரிதல் விரும்புதல்; இஃதிப்பொருட்டாதலை "நயம் புரிந்துறையுநர்" (145) என்னும் புறப்பாட்டினுங் காண்க. சிறியாரினம் : ஒன்றன் கூட்டத் தற்கிழமைப் பொருளதான ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடரென்க. இறையிற் பெரியான் - தலைமைத் தன்மையிற் பெரியானென்பது. மறை : தொழிலடியாகப் பிறந்த பெயர்; ஐ : செயப்படுபொருண்மை விகுதி, மறுக்கப்பட்டது என்பது பொருள். ‘பிறர் பொருள்மேல் செல்லான்', ‘பல்லார் மறையில்' என்றும் பாடம்.

(19)

20. மின்னே ரிடையார்சொற் றேறான் விழைவோரான்
கொன்னே வெகுளான் கொலைபுரியான் - பொன்னே
உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் றன்னின்
வெறுப்பறுத்தான் விண்ணகத்து மில்.