பக்கம் எண் :

2


அறநூல் - அறநூலால் உணர்த்தப்படும் அறமாகிய பொருட்குக் கருவியாகுபெயர். கணித்தல் - மேலாக மதித்தல். இச்சிறப்புப் பாயிரச் செய்யுளில் ஆக்கியோன் பெயர், வழி, யாப்பு நுதலிய பொருள் இந்நான்கும் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன.

தற்சிறப்புப் பாயிரம்

கடவுள் வணக்கம்

2. அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
கிறைபுரிந்து வாழ்த லியல்பு.

(இ-ள்.) அறு நால்வர் - இருபத்துநான்கு பேர், ஆய்புகழ் - ஆராயும் புகழமைந்த, சேவடி ஆற்றப்பெறு நால்வர் - திருவடித் தொண்டு செய்யப்பெறும் நான்குபேரும், பேணி வழங்கி - போற்றி வழங்குதலால், பெறும் நால் மறை - பெறப்படும் நான்மறைகளை, புரிந்து - விரும்பி, வாழுமேல் - ஒருவன் ஒழுகுவனாயின், மண் ஒழிந்து - மண்ணுலகினின்றும் நீங்கி, விண்ணோர்க்கு - தேவர்களுக்கு, இறை புரிந்து - தலைமைபூண்டு, வாழ்தல் இயல்பு - இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்.

(ப-பொ-ரை.) மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்ற புகழமைந்த தனது சிவந்த பாதங்களாலிட்ட பணியைச் செய்யாநிற்க, ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்ற பிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக் கொடுத்துக் கற்றுணர்ந்தடைந்த நான்மறை யொழுக்கத்தை விரும்பி நடந்து ஒருவன் வாழ்வானானால், பூமியினின்று நீங்கித் தேவர்க்கு அரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்தல் உண்மையாம்.

‘விண்ணோர்க்கு இறைபுரிந்து' என்பதற்குத் தேவர்க்கு அரசனால் விரும்பப்பட்டு என்பதுமாம். அறுநால்வர் - மந்திரி முதலிய இருபத்து நால்வர். அவர்கள் ஐம்பெருங்குழு, எண் பேராயம், ஐவகைச்சுற்றம், ஆறங்கம் இவற்றைச் சேர்ந்த