பக்கம் எண் :

23

பாரான், கலியாணஞ் செய்ய நின்றானென்று பாரான், புண்ணியஞ் செய்ய நின்றானென்று பாரான், சுற்றமுடையானென்று பாரான், ஆதலால் தன்னகர்க்குத் துணையாகிய மனைவாழ்க்கையை வேண்டானாய்ப் பெரியோராற் செய்யப்பட்ட ஆகமத்தைக் காலற்கு வாய்ப்பாகக் கோடல் ஒருவற் கழகாவது.

(க-து.) துறவொழுக்கத்தை விரும்புகின்றவன் இயல்பு முதலியவற்றைப் பொருட்படுத்தாமற் பிறப் பிறப்புக் கெடுதற்கான ஆன்றோ ரறிவு நூல்களைக் கற்றொழுகுதலே அழகாகும்.

நோக்கான் முதலியன முற்றெச்சம் : உம்மைக ளிரண்டும் முற்றெச்சம். கால்காப்பு வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. ‘காதலற்கு வாய்காப்புக் கோடல்' என்ற பாடங்கொண்டு, கால்காப்பு வேண்டான் என்பதைத் தந்தை யெனலுமாம். காலன் வருகின்ற வழிக்கு ஒரு காப்பாகவென்க. வாய் - வழி.

(23)

24. பிணிபிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம்
தணிவி னிரப்பிவை தாழா - அணியின்
அரங்கின்மே லாடுநர்போ லாகாம னன்றாம்
நிரம்புமேல் வீட்டு நெறி.

(இ-ள்.) பிணி - நோயும், பிறப்பும் - பிறத்தலும், மூப்பொடு - கிழத்தனமும், சாக்காடு - இறத்தலும், துன்பம் - முயற்சித் துன்பமும், தணிவுஇல் - போதுமென்னும் அமைதியில்லாத, நிரப்பு - வறுமையும், இவை - ஆகிய இவைகள், தாழா உடனே அடையும்; ஆதலால், அரங்கின்மேல் - ஆட்ட மேடையின்கண், அணியின் - மாறிமாறிப் புனையுங் கோலத்தினையுடைய, ஆடுநர்போல் - ஆடுகின்றவரைப்போல, ஆகாமல் - மாறி மாறிப் பிறந்திறவாமல், வீட்டு நெறி - துறவொழுக்கம், நிரம்பு மேல் - ஒருவன் நிரம்புவானாயின், நன்றுஆம் - அவனுக்கு இன்பம் உண்டாகும்.

(ப-பொ-ரை.) பிணியும், ‘பிறப்பும், மூப்பும், சாக்காடும் இழவினான் வருந் துன்பமும், தேடுதலானே வருங் குறையாத விடும்பையுமென் றிவை யாறு மதிட்டியாது வருமாயிற் சொல் வேறுபாட்டினா னரங்கின்கண் வந்தாடும் கூத்தரைப்போலப் பிறந்திறந்துழலாதே வீட்டுநெறியே யொருவற்கு வந்து நிரம்புமாயினன்றாம்.