னென்பது நுகர்தன்மேலது.தேவாதிதேவன், இந்திரன்; ஆக : கடை குறைந்தது, ஈத்து ; ஈந்து என்பதன் வலி. (32) 33. பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும் மெய்யுரையா னுள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான் கூந்தன்மயி லன்னாய்! குழீஇயவான் விண்ணோர்க்கு வேந்தனா மிவ்வுலகம் விட்டு. (இ-ள்.) கூந்தல் மயில் அன்னாய் - மயிற்றோகையைப் போன்ற கூந்தலையுடைய பெண்ணே!, பொய் உரையான் - பொய் சொல்லான்; வையான் - எவரையும் இகழான்; யாவரையும்-ஒருவரையும், புறங்கூறான் - புறம்பாக இழித்துப் பேசான்; மெய் உரையான் - பிறர் துன்பத்தை நீக்குதற்காக நடந்த உண்மையைச் சொல்லான், உள்ளனவும் - தன்மாட்டு உள்ள பொருள்களையும், விட்டு உரையான் - வெளிப்படுத்துச் சொல்லான், எய் உரையான் - நண்பன்மாட்டுந் தன் வறுமையை வெளிப்படுத்தானாகிய இவன், இவ்வுலகம் விட்டு - இம்மண்ணுலகத்தை விட்டு நீங்கி, வான் குழீஇய - மேலுவலகத்திற் கூடியுள்ள, விண்ணோர்க்கு - தேவர்களுக்கு, வேந்தன் ஆம் - தலைவனாவான். (ப-பொ-ரை.) விரி தோகையன்ன கூந்தலையுடையாளே! பிறர் தீங்கு கருதி யுண்மையும் பேசானாகியும் இகழானாகியும் தனக்குத் தீமை செய்தாரையும் புறத்தில் அவமதித்துப் பேசானாகியும், ஒருவருக்கு நேர்ந்த இடுக்கண்களை யொழிக்கும் பொருட்டு நடந்த உண்மையைச் சொல்லானாகியும், தன்னிடத்திலுள்ள பொருள்களை வாய் விட்டுச் சொல்லானாகியும், நண்பனிடத்தும் தன் வறுமைத் துன்பத்தைச் சொல்லானாகியும் உள்ள ஒருவன் இந்த உலகத்தைவிட்டு வானுலகிற் கூடியுள்ள தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரனாவான். (க-து.) பொய்யாமை முதலியன உடையான் இந்திர வாழ்வில் வைகுவான். உள்ளனவும் என்பதன்கண் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.கூந்தலை மயிற்றோகைக்கே ஆக்கியுரைப்பினுமாம்.அளபெடை, இன்னிசை நிறைத்தது.எய் : முதனிலைத் தொழிற்பெயர். (33)
|