பக்கம் எண் :

32

34. சிதையுரையான் செற்ற முரையான் சீறில்லான்
இயல்புரையா னீன முரையான் - நசையவர்க்குக்
கூடுவ தீவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து.

(இ-ள்.) கொவ்வைபோல் - கோவைக்கனியைப் போன்ற, செவ்வாயாய் - சிவந்த வாயையுடைய பெண்ணே!, சிதை உரையான் - கீழ்மை பேசாமலும், செற்றம் உரையான் - பகைமை பேசாமலும், சீறு இல்லான் - பிறர்மேற் சினத்தல் இல்லாமலும், இயல்பு உரையான் - தனது நல்லியல்பினைப் புகழாமலும், ஈனம் உரையான் - குற்றஞ் சொல்லாமலும், நசையவர்க்கு - தன்னை விரும்பி வந்தவர்கட்கு, கூடுவது ஈவானை - இயல்வது கொடுத்துதவுவா னொருவனை, விண்ணோர்கள் - தேவர்கள், நயந்து நாடுவர் - விரும்பி மகிழ்வார்.

(ப-பொ-ரை.) கோவம்பழம் போன்ற சிவந்த வாயினையுடையாய்! கீழ்மையான சொற்களைப் பேசாமலும், சினமூட்டுஞ் சொற்களைக் கூறாமலும், சீறுதலில்லாமலும், தன்னாலியலக்கூடிய மேம்பாட்டை எடுத்துப் பாராட்டாமலும், பிறர் குற்றங்களைச் சொல்லாமலும், தன்னிடத்து வந்து ஏற்றோர்க்கு இல்லையென்னாது இசைந்தமட்டு முதவுவோனைத் தேவர்கள் தங்களுடனிருந்து மகிழ விரும்புவர்.

(க-து.) கீழ்மைபேசாமை முதலியன உடையானைத் தேவரும் விரும்புவார்.

நசையவர் : வினையாலணையும் பெயர். ‘நயந்து நாடுவ' ரென்பதை ‘நாடிநயப்ப'ரென விகுதி பிரித்து மாற்றிக்கொள்க. சிதை : பண்பாகுபெயர். செற்றம் : காரியவாகுபெயர். சீறு : முதனிலைத் தொழிற்பெயர். கொவ்வை : முதலாகுபெயர்.

(34)

35. துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றா
திறந்தாரீ டற்றா ரிளையர் - சிறந்தவர்க்கும்
பண்ணாளுஞ் சொல்லாய் பழியிலூண் பாற்படுத்தான்
மண்ணாளு மன்னனாய் மற்று.

(இ-ள்.) பண் ஆளும் - பண்ணிசையைப் போன்ற, சொல்லாய் - சொல்லையுடைய பெண்ணே!, துறந்தார் - கைவிடப்