கட்கும், சாலவும் - மிகவும், ஆழப்படும் - உண்டபின் வயிற்றில் தங்குதற்குரிய, ஊண் அமைத்தார் - உணவைப் படைத்தவர், இமையவரால் - தேவர்களால், விரைந்து வீழப்படுவார் - விரைவாக விரும்பப்படுவார். (ப-பொ-ரை.) நொண்டிகளுக்கும், குருடர்களுக்கும், ஊமைகளுக்கும், எவரையும் தம்பக்கம் துணையாக இல்லாதவர்களுக்கும், பதிந்த நூலறிவில்லாதவர்க்கும் நீரினாற் சமைக்கப்பட் டாழ்ந்த உணவை விரும்பி யளித்தவர், தேவர்களால் விரைவாக விரும்பப்படுவார். (க-து.) முடவர் முதலாயினாருக்கு வயிறு நிறைய உணவு படைத்தல் வேண்டும். காலில்லார் என்பதற்கு இனம்பற்றிக் கையில்லார் முதலியோரையுங் கொள்க.இல்லார் : குறிப்புவினையாலணையும் பெயர். பால், பக்கம், ஈண்டுச் சார்பு, ஆழப்படும் ஊண்கண்ணுக்கு அருவருக்கத் தக்கதும், மூக்குக்கு நறுமண மில்லதும், நாவுக்குச் சுவையில்லது மல்லாமையால் உண்டபின் வயிற்றிற் றங்குதற்குரிய ஊண், இனி வயிற்றின் ஆழத்தில் நிறையும் ஊணென்பதுமாம்.கண் - கட்புலன், பொருளாகுபெயர். இமையவர் : மங்கல வழக்கு. (36) 37. அழப்போகா னஞ்சா னலறினாற் கேளான் எழப்போகா னீடற்றா ரென்றும் - தொழப்போகான் என்னேயிக் காலனீ டோரான் தவமுயலான் கொன்னே யிருத்தல் குறை. (இ-ள்.) அழ போகான் - தன்னைக் கண்டஞ்சி அழவும் போகான், அஞ்சான்- வீர முதலியனவுடையானென்று பயப்பட்டான், அலறினால் - கதறினாலும், கேளான் - கேட்கமாட்டான், எழ போகான் - எழுந்து உபசரித்தாலும் அப்பாற் செல்லான், ஈடு அற்றார் என்றும் - தன்னைக் கடக்கும் வலியற்றவரென்றும் (போகான்), தொழபோகான் - வணங்கவும் போகான், என்னே- யாது எண்ணியோ, இ காலன் - இந்த எமனது, ஈடு - பெருமையை, ஓரார் - உணராமல், தவம் முயலார் - தவஞ் செய்யா திருக்கின்றார்கள், கொன்னே இருத்தல் - தவஞ்செய்யாது வாளாஇருத்தல், குறை - குறையாம்.
|